search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து ஆகுமா?- ஆந்திர அரசு தீவிர பரிசீலனை

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? அல்லது தொடரலாமா? என்பது பற்றி ஆந்திர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் உள்ள மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திய மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 2 நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 10-ந் தேதியில் இருந்து பொது தரிசனத்தில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள்.

    கொரோனா பரவுவதை தடுப்பதற்காக கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சமூக விலகலை கடைபிடித்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு (வயது 67) நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பெரிய ஜீயரின் உடல்நிலை சீராக இருப்பதால், மடத்திலேயே தனி இடத்தில் தங்கி சிகிச்சை பெற அவர் விரைவில் அங்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    பெரிய ஜீயருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், திருமலையில் அவர் தங்கி இருந்த மடத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

    பெரிய ஜீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் ஆந்திர மாநில அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.

    ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறுகையில், கோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் தற்போது அர்ச்சகர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், எனவே சில நாட்களுக்கு கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசனத்தை ரத்து செய்யலாம் என யோசனை தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.

    இதனால் பக்தர்களுக்கான சாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? அல்லது தொடரலாமா? என்பது பற்றி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அரசிடம் இருந்து உத்தரவு வந்தால், பக்தர்களுக்கான தரிசன அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், இல்லையெனில் பக்தர்கள் தரிசனம் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×