search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங் ஆய்வு
    X
    ராஜ்நாத் சிங் ஆய்வு

    காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ராஜ்நாத் சிங் ஆய்வு

    எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார்.
    ஸ்ரீநகர்:

    கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர்ப்பதற்றம் நிலவியது. பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன. எனினும், எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று லடாக்கில் உள்ள லே நகருக்கு சென்றார். லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில், 2-வது நாளாக ஸ்ரீநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத்சிங், குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு செய்தார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடனும் ராஜ்நாத்சிங் கலந்துரையாடினார்.

    முன்னதாக, அமர்நாத் கோவிலுக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்கு வழிபாடு மேற்கொண்டார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதி எம் எம் நரவனே ஆகியோரும் வழிபாடு செய்தனர். கடந்த 3-ம் தேதி பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு திடீரென பயணம் மேற்கொண்டார். அங்கு வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தது நினைவிருக்கலாம். 
    Next Story
    ×