search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீஸ்
    X
    போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த போலீஸ்

    கேரள முதல்வர் பதவி விலக கோரி திடீர் போராட்டம்- தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்த போலீஸ்

    தங்க கடத்தல் வழக்கில் தவறுக்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி சார்பில் இன்று கோழிக்கோட்டில் போராட்டம் நடைபெற்றது.
    கோழிக்கோடு:

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எந்த விசாரணைக்கும் தயார் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக முன்னாள் அதிகாரியும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஆபரேசனல் மேஜேனருமான ஸ்வப்னா சுரேஷ் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார். 

    இந்த கடத்தல் சம்பவத்தில் ஸ்வப்னாவை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரும், முதல்வரின் முதன்மைச் செயலாளருமான சிவசங்கர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து முதல்வரின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து சிவசங்கர் நீக்கப்பட்டார்.

    கேரள முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராக இருந்தவருக்கும், தங்கம் கடத்தலில் உதவிய பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதால், எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனை நோக்கி போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

    இந்நிலையில், தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு இருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி சார்பில் இன்று கோழிக்கோட்டில் திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸ் தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் முன்னேறினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×