search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசத்தில் சிக்கிய விகாஸ் துபே
    X
    மத்திய பிரதேசத்தில் சிக்கிய விகாஸ் துபே

    8 போலீஸ்காரர்களை கொன்ற ரவுடியின் கதையை முடித்த உ.பி. அதிரடிப்படை

    காயமடைந்த போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றதால் ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.
    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவம் காவல்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே, ஐந்து நாட்களுக்கு பிறகு மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நேற்று சிக்கினான்.  

    விசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசிடம் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.

    கவிழ்ந்து கிடக்கும் கார்

    இன்று காலை 7 மணியளவில் கான்பூரை அடைந்தபோது, விகாஸ் துபே இருந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. விகாஸ் துபேயும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மற்ற போலீசார் அனைவரும் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான். அவன் இறந்ததை காவல்துறை உறுதி செய்தது. விகாஸ் துபே உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கார் கவிழ்ந்த விபத்தில் 4 போலீசார் காயமடைந்ததாகவும், விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கான்பூர் ஐஜி மோகித் அகர்வால் தெரிவித்தார்.

    நடந்த சம்பவம் பற்றி கான்பூர் மேற்கு மாவட்ட எஸ்பி கூறியதாவது:-

    கார் கவிழ்ந்த பிறகு, காயமடைந்த போலீஸ்காரர்களிடம் இருந்து துப்பாக்கியை பறித்த விகாஸ் துபே, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை சரண் அடையும்படி கூறியபோது, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். போலீசாரும் பதிலுக்கு அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபேயை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விகாஸ் துபேயை அழைத்து வந்தபோது ஏற்பட்ட விபத்து, அதன்பின்னர் நடந்த என்கவுண்டர் தொடர்பாக உ.பி. காவல்துறை விரைவில் விரிவான விவரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×