search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விகாஸ் துபேயை போலீசார் கைது செய்து அழைத்து வந்த காட்சி
    X
    விகாஸ் துபேயை போலீசார் கைது செய்து அழைத்து வந்த காட்சி

    நான் விகாஸ் துபே.... உஜ்ஜைன் மகாகாளி கோவிலில் கைது செய்யப்பட்டதும் கோபத்தில் கத்திய ரவுடி

    கான்பூர் என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே, 5 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு மத்திய பிரதேச மாநிலத்தில் சிக்கி உள்ளான்.
    உஜ்ஜைன்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். 

    போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதற்காக 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனால், விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்தான்.


    போலீசாரின் 5 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் அணிந்து சென்றபோது அவனை பார்த்த கடைக்காரர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    பின்னர் கோவிலில் இருந்து வெளியேறிய விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, விகாஸ் துபே கோபத்தில் ‘நான் கான்பூர் விகாஸ் துபே’ என்று கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    விகாஸ் துபே மீது கொலை, கொலை செய்ய தூண்டுதல், ஆட்கடத்தல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவன் கைது செய்யப்பட்டது காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

    விகாஸ் துபே போலீசில் சிக்காமல், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில், அவனுக்கு தொடர்ந்து உதவி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×