search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூக்கு தண்டனை
    X
    தூக்கு தண்டனை

    பெண்களை குறிவைத்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை - அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி

    மேற்குவங்காளத்தில் பெண்களை குறிவைத்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பள்ளி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கோர்ட்டு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
    கொல்கத்தா:

    மேற்குவங்காள மாநிலத்தின் பூர்பா பார்தமான் மற்றும் ஹூக்லில் மாவட்டங்களில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து 5 பெண்கள் சைக்கிள் செயினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் அவர்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டு இருந்தனர். ஒரே பாணியில் நடந்த 5 கொலைகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கமருஸ்மான் சர்கார் (வயது 42) என்பவர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

    ‘டிப் டாப்’ உடை அணிந்து சிவப்பு நிற ஹெல்மெட் மாட்டிகொண்டு மோட்டார் சைக்கிளில் வலம் வரும் இவர், மின்சார அலுவலகத்தில் இருந்து கணக்கெடுக்க வந்திருப்பதாக கூறிக்கொண்டு மதிய நேரத்தில் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டுக்குள் நுழைவார். பின்னர் அவர்களை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கூர்மையான ஆயுதங்களால் தலையில் தாக்கியும், சைக்கிள் செயினால் கழுத்தை நெரித்தும் கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த அட்டூழியத்தை நிகழ்த்தி வந்த இவர், ‘செயின் கில்லர்’ என்று அழைக்கப்பட்டார்.

    பள்ளி மாணவி ஒருவரை கற்பழித்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட வந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீஸ் பிடியில் சிக்கினார். இந்த வழக்கு மீதான விசாரணை அங்குள்ள மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கமருஸ்மான் சர்கார்தான் குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தபன் குமார் மண்டல் உத்தரவிட்டார்.

    தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கமருஸ்மான் சர்காருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×