search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அமர் துபே
    X
    போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அமர் துபே

    கான்பூர் என்கவுண்டர் வழக்கு- ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியை சுட்டுக்கொன்றது அதிரடிப் படை

    உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ரவுடியின் நெருங்கிய கூட்டாளியை அதிரடிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கடந்த 3ம் தேதி கான்பூர் மருகே உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். 

    போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    விகாஸ் துபே

    இந்நிலையில், ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபே, ஹமிர்பூர் மாவட்டம் மவுதாகாவில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் இன்று காலை அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த என்கவுண்டரில் அமர் துபேயை அதிரடிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    கான்பூர் என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய ரவுடிகளின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் அமர் துபேயின் பெயர், முதலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே டெல்லி-மதுரா நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. பரிதாபாத் பத்கர் சவுக் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை செய்தபோது, ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அவர் தன்னுடன் விகாஸ் துபே தங்கியிருந்ததாக கூறி உள்ளார்.

    இதேபோல் விகாஸ் துபேயின் மைத்துனர் ராஜீவ் நிகமை தேடி போலீசார் வந்தனர். அவரது மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ராஜீவ் நிகம் மற்றும் அவரது மனைவி கூறி உள்ளனர்.
    Next Story
    ×