search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ந்திரபாபு நாயுடு
    X
    ந்திரபாபு நாயுடு

    ஆந்திராவின் தலைநகராக அமராவதியே நீடிக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு கோரிக்கை

    ஆந்திராவின் தலைநகராக அமராவதியே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்து உள்ளார்.
    விஜயவாடா:

    ஒன்றுபட்ட ஆந்திரபிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்தபிறகு தலைநகர் ஐதராபாத், தெலுங்கானாவின் தலைநகராக மாறிப்போனது. எனவே ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகராக மாற்றுவதற்கு அப்போதைய தெலுங்குதேசம் அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது. இதற்காக அமராவதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தையும் வழங்கினர்.

    ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவுக்கு 3 தலைநகரை உருவாக்க முடிவு செய்துள்ளார். அதன்படி அரசியலமைப்பு தலைநகராக அமராவதியும், நிர்வாக தலைநகராக விசாகப்பட்டணமும், நீதித்துறை தலைநகராக கர்னூலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    இதற்காக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி பணிகள் நடந்து வந்த நேரத்தில் கொரோனா பரவல் வேகம் பிடித்தது. எனவே இந்த தலைநகர் மாற்றும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

    அமராவதியில் இருந்து விசாகப்பட்டணத்துக்கு தலைநகரை மாற்றும் நடவடிக்கைக்கு தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆந்திராவுக்கு ஒரே தலைநகராக அமராவதியையே தொடரச்செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    இதைப்போல தலைநகர் உருவாக்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த தொடர் போராட்டம் நேற்று 200-வது நாளை எட்டியது.

    இதையொட்டி இந்த போராட்டத்தில் பங்கேற்ற தெலுங்குதேசம் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திராவின் வளர்ச்சிக்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த தலைநகரம் தேவைப்பட்டது. இதை உருவாக்கும் நோக்கில் அமராவதியில் நான் பணிகளை தொடங்கினேன். இதற்காக அரசின் மீது நம்பிக்கை வைத்து 29 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தானாக நிலம் வழங்கினர்.

    இதன் மூலம் சட்டசபை கடடிடம், தலைமை செயலகம், ஐகோர்ட்டு, கவர்னர் மாளிகை, அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் என பல்வேறு கட்டுமான பணிகளுக்காக ரூ.9 ஆயிரம் கோடியை எனது ஆட்சிக்காலத்தில் செலவிட்டு உள்ளோம். முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட, தலைநகருக்கு இந்த பகுதி சிறந்த இடம் என கூறியிருந்தார்.

    ஆனால் தற்போது 3 தலைநகர் திட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளார். தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டணத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். இது விவசாயிகளுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தலைநகருக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும். ஆந்திராவின் தலைநகராக அமராவதியே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
    Next Story
    ×