search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாயில் காயத்துடன் படுத்து இருக்கும் காட்டுயானை.
    X
    வாயில் காயத்துடன் படுத்து இருக்கும் காட்டுயானை.

    அட்டப்பாடி வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானை

    அட்டப்பாடி வனப்பகுதியில் ஒரு யானை வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த யானைக்கு விரைந்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பாலக்காடு:

    கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்ததை தின்ற கர்ப்பிணி யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலக்காடு மாவட்டம் அமைதி பள்ளத்தாக்கில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களின் மன அமைதியை குலைத்ததால், இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் தற்போது பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் மீண்டும் ஒரு யானை வாயில் காயத்துடன் சுற்றி திரியும் சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    அட்டப்பாடியை அடுத்த சோலையூர் பகுதியில் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் பரிதவித்து வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிகிராம மக்கள் அதற்கு சாப்பிட வாழைப்பழம் உள்ளிட்டவற்றை கொடுத்தனர். ஆனால் அந்த யானையால் எதையும் சாப்பிட முடியவில்லை. இதனால் அந்த யானை சற்று சோர்வாக காணப்பட்டது. ஆனால் பொதுமக்கள் யாராவது அருகில் வந்தால் தாக்க முயற்சி செய்தது.

    இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காயமடைந்து உள்ள யானை வனப்பகுதிக்குள் சிறிது தூரம் செல்வதும், மீண்டும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அதன் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வாயில் காயத்துடன் சுற்றிவரும் யானையின் படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த யானைக்கு விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானைக்கு சுமார் 5 வயது இருக்கலாம். காயம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகியது போல் தெரிகிறது. ஏனெனில் புண் ஏற்பட்ட பகுதியில் தற்போது புழுக்கள் உருவாகி வெளியே வந்து கொண்டிருக்கிறது. யானை வலியால் துடித்து கொண்டு அங்குமிங்கும் ஓடுவதால் அதற்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.

    மேலும் அமைதி பள்ளத்தாக்கில் அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து கொடுக்கப்பட்டதை போன்று இதற்கும் தரப்பட்டதா? மற்ற யானை தாக்கியதில் காயம் ஏற்பட்டதா? அல்லது 5 வயது குட்டியானை என்பதால் உணவு சாப்பிட்டபோது மரக்கிளை குத்தி காயம் அடைந்ததா என்று தெரியவில்லை. எனவே மயக்க ஊசி செலுத்தி யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து உள்ளோம். மேலும் வனப்பகுதியில் வனத்துறையினர் சார்பில் வைக்கப்பட்டு உள்ள கேமராக்களும் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×