search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு
    X
    அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு

    அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு: கர்நாடக அரசு

    அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு செய்து, அதற்கான வழிகாட்டுதலை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியும் அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடக அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மேலும் ஊரடங்கு நேரமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இத்தகைய கொரோனா நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் அறிகுறி இல்லாத, லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளை அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் முன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த நோயாளியின் வீட்டை நேரில் ஆய்வு செய்து, அது தனிமைப்படுத்துவதற்கு உகந்த வகையில் உள்ளதா என்பதை முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கு தொலைதூர மருத்துவ சேவை மூலம், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரங்கள் வழங்கப்படும். நோயாளிகள் தினமும், சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தங்களின் உடல்நிலை குறித்த விவரங்களை வழங்க வேண்டும்.

    அந்த நோயாளிகள் தங்களிடம் நாடித்துடிப்பை அறியும் ஆக்சிமீட்டர் கருவி, காய்ச்சலை சோதனை செய்யும் தெர்மாமீட்டர், உடல் கவச உடைகள், முகக்கவசம், கையுறை போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். வீட்டில் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும்.

    ஆக்சிஜன் அளவு 95 ஆக இருக்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்டவர்கள், இணை நோய் இல்லாதவர்கள் மட்டுமே வீட்டு தனிமையில் வைக்கப்படுவார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டு தனிமை பொருந்தாது. கொரோனா நோயாளிகளுக்கு வீட்டில் காற்றோட்டமான ஒரு தனி அறை இருக்க வேண்டும். அந்த அறையுடன் கழிவறை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    நோயாளி அந்த அறையில் மட்டுமே இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது. மூச்சுத்திணறல், நெஞ்சில் அழுத்தம், மனநிலை குழப்பம், ஆக்சிஜன் அளவு குறைந்தால், உடனடியாக கண்காணிப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டு சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் வீட்டின் முன்பு சுவற்றில், ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

    அந்த நோயாளியின் கையில் முத்திரையை பதிக்க வேண்டும். நோயாளியின் இடது கையில் மின்னணு கயிறு (டேக்) கட்டப்படும். அருகில் உள்ள வீடுகளில் குடியிருப்போரிடம், கொரோனா நோயாளி இருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படும். வீட்டு தனிமை விதிமுறைகளை நோயாளி மீறினால், எச்சரிக்கை விடுக்கப்படும். 2-வது முறையாக விதிமுறையை மீறினால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

    நோயாளிகள் வீட்டில் என்.95 முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், 8 மணி நேரத்திற்கு பிறகு அதை அகற்றிவிட்டு புதிதாக முகக்கவசம் அணிய வேண்டும். நோயாளிகள் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    நோயாளி பயன்படுத்தும் எந்த பொருட்களையும் குடும்பத்தினர் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் தரையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குடும்பத்தினர் நோயாளியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பயப்பட தேவை இல்லை. அக்கம் பக்கத்தினர் பயப்பட தேவை இல்லை. கொரோனா நோயாளி உள்ள குடும்பத்தினருக்கு மருந்துகள், ரேஷன் பொருட்கள், காய்கறிகள், வழங்கி உதவி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×