search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா உள்துறை மந்திரி முகமது மமூத்
    X
    தெலுங்கானா உள்துறை மந்திரி முகமது மமூத்

    தெலுங்கானா உள்துறை மந்திரிக்கு கொரோனா

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    ஐதராபாத்:

    அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 14 லட்சத்து 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 247 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்தநிலையில் தெலுங்கானா மாநில உள்துறை மந்திரி முகமது மமூத் (வயது 67) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கார்பரேட் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்குமுன்பு மந்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும், மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரும். பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுதவிர தெலுங்கானா போலீஸ் பயிற்சி மையத்தில் 15 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் அங்கு பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் 3 பேருக்கும் புதிதாக தொற்று தற்போது உறுதியாகி உள்ளது. ஐதராபாத்தில் மட்டுமே கொரோனா தொற்று அதிகரித்து வந்தநிலையில், தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது.

    இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேந்தர் கூறுகையில், ‘ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியதே தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகம் பரவ காரணம். இருப்பினும் தெலுங்கானாவில் இறப்பு விகிதம் 1.17 சதவீதமாக குறைந்தே உள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 10 ஆயிரம் புதிதாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 150 ஆம்புலன்ஸ்களும், 4 ஆயிரத்து 700 சுகாதார பணியாளர்களை நியமிக்கவும் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அனுமதி அளித்துள்ளார்’ என்று தெரிவித்தார். 
    Next Story
    ×