search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கொரோனாவால் உயிரிழக்கும் முன்பு தந்தைக்கு வாலிபர் அனுப்பிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

    கொரோனாவால் உயிரிழக்கும் முன்பு தந்தைக்கு வாலிபர் அனுப்பிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அதில் 3 மணி நேரமாக கெஞ்சியும் ஆஸ்பத்திரியில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று அவர் பேசியுள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 34 வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு சிகிச்சையில் அலட்சியம் இருப்பதாக கூறி தனது தந்தைக்கு ‘செல்பி வீடியோ’ ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்த வீடியோவில், “என்னால் சுவாசிக்க முடியவில்லை. 3 மணி நேரமாக கெஞ்சியும் ஆஸ்பத்திரியில் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. இதயத்துடிப்பு நின்றுவிட்டது, நுரையீரல் மட்டுமே இயங்குகிறது. பை டாடி பை, அனைவருக்கும் பை” என்று பேசி அந்த வீடியோவை தனது தந்தைக்கு அனுப்பி இருக்கிறார். நெஞ்சை பதறவைக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

    இதுகுறித்து ஆஸ்பத்திரியின் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சுவாச பிரச்சனை இருந்ததால், அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. ஆனாலும் திடீரென மாரடைப்பால் அவர் கடந்த 26-ந் தேதி உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.

    அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேந்தர் கூறுகையில், “அரசு ஆஸ்பத்திரிகளில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரிகளை மோசமாக காட்டும் வகையில் சமூக ஊடகங்களில் நியாமற்ற பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற பிரசாரம் ஆஸ்பத்திரி ஊழியர்களின் மனநிலையை பாதிக்கும். கொரோனா சிகிச்சை வார்டில் இருப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக இணையம் மற்றும் தொலைபேசி வசதி வழங்கப்பட்டுள்ளது, அதை தவறாக பயன்படுத்தக்கூடாது. உயிரிழந்த அந்த வாலிபர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுவிட்டு கடைசியாகத்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்” என்றார்.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்னம் பிரபாகர் இது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
    Next Story
    ×