search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணொலி வாயிலாக திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி
    X
    காணொலி வாயிலாக திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி

    1.25 கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு... உ.பி. ரோஜ்கார் அபியான் திட்டத்தை துவக்கி வைத்தார் மோடி

    சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என உ.பி.யில் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர். தற்போது அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 

    ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை  பிரதமர் மோடி கடந்த 20-ம் தேதி துவக்கி வைத்தார். 

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் இன்று ஆத்ம நிர்பார் உத்தர பிரதேச ரோஜ்கார் அபியான் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இத்திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி மற்றும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று துவக்கி வைத்தனர். இத்திட்டப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த சுமார் 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்கள் என மொத்தம் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 31 மாவட்டங்களில் ஆத்ம நிர்பார் உத்தர பிரதேச ரோஜ்கார் அபியான் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனாவால் பெரிய நெருக்கடியில் இருக்கும்போது, ​​உத்தரபிரதேசம் காட்டிய தைரியம், கொரோனாவை கையாண்ட விதம், நிலைமையைக் கையாண்ட விதம், வெற்றி பெற்ற விதம் பாராட்டத்தக்கது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை நாம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசங்களை அணியவேண்டியிருக்கும்’ என்றார்.

    கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தின்கீழ் 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 25 வெவ்வேறு துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 125 நாட்களுக்கு இப்பணி நடைபெற உள்ளது.
    Next Story
    ×