search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கொடி
    X
    பாகிஸ்தான் கொடி

    பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் தோல்வி... கிரே பட்டியலில் பாகிஸ்தான் நீடிப்பு

    பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியை தடுக்க தவறியதால், பாகிஸ்தான் நாடு, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கிரே பட்டியலில் நீடிக்கிறது.
    புதுடெல்லி:

    பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இந்த அமைப்பு, கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது. கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக்கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன.

    இவற்றுக்கு, உலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல், பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம், பிற நாடுகளுடன் வர்த்தக தொடர்பும் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம். 

    அவ்வகையில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்திய எப்ஏடிஎப் அமைப்பு, அந்த நாட்டை கிரே பட்டியலில் வைத்து உத்தரவிட்டிருந்தது. மேலும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பதற்கான இலக்குகளையும் நிர்ணயித்திருந்தது.

    இந்நிலையில், எப்ஏடிஎப் அமைப்பின் கூட்டம் புதன்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில், பாகிஸ்தானை அக்டோபர் மாதம் வரை கிரே பட்டியலில் நீட்டித்து எப்ஏடிஎப் உத்தரவிட்டுள்ளது. 

    பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பது தொடர்பான எப்ஏடிஎப் அமைப்பின் 27 செயல்திட்டங்களில் 13 திட்டங்களை கையாளவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், அக்டோபர் மாதத்திற்குள் நிதி தடுப்பு இலக்குகளை அடையத் தவறினால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கருப்பு பட்டியலில் இப்போது வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன. 

    எப்ஏடிஏப் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானில் இருந்து நிதி வருவது எவ்வாறு தொடர்கிறது என்பதை நாங்கள் விளக்கினோம். பாகிஸ்தான் எப்ஏடிஎப் உறுப்பினராக இல்லாததால் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி அனைத்து ஐ.நா கண்காணிப்பு குழு அறிக்கைகளையும் எப்ஏடிஎப் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்யும்’ என்றார்.

    ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தானியர்கள் செயல்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு தீவிரமாக உதவுவதாகவும் ஐ.நா கண்காணிப்பு அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது துணை அமைப்புகள் தற்போது ஆப்கானிஸ்தான் மண்ணில் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன், பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானுக்குள்  கிட்டத்தட்ட 30,000 முதல் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டதாக ஜூன் 1ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை இப்போது வைரலாகி வருகிறது.
    Next Story
    ×