search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மந்திரி ஷைலஜா
    X
    கேரள மந்திரி ஷைலஜா

    கொரோனா பரவலை கேரளா வெற்றிகரமாக கையாள்வது எப்படி?- ஐநா சபை கருத்தரங்கில் பெண் மந்திரி விளக்கம்

    கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக கேரளா கையாள்வது எப்படி என்பது பற்றி ஐ.நா. சபை கருத்தரங்கில் கேரள பெண் மந்திரி ஷைலஜா விளக்கினார்.
    திருவனந்தபுரம்:

    கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக கையாண்டு நாட்டுக்கே கேரளா முன்மாதிரியாக திகழ்கிறது. சீனாவின் வுகான் நகரில் டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக கொரோனா தொற்று வெளிப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் முதல்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 6 மாத காலத்தில் கொரோனாவை மற்ற மாநிலங்களை விட கேரளா சிறப்பாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அங்கு மொத்தம் சுமார் 3,450 பேருக்குத்தான் தொற்று ஏற்பட்டுள்ளது. 22 பேர் மட்டுமே சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். 1809 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 1620 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவை கேரளா வெற்றிகரமாக கையாள்கிற விதம் ‘கேரளா மாடல்’ என்ற பெயரை அந்த மாநிலத்துக்கு பெற்றுத்தந்துள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. சபையின் சார்பில் நியுயார்க் நகரில் உலக பொது சேவை தினத்தையொட்டி இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே, எத்தியோப்பியா அதிபர் சாஹ்லே வொர்க் ஜீவ்டே, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரங்கள் துணைச்செயலாளர் லியு ஜென்மின், தென்கொரிய உள்துறை மந்திரி சின் யெங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் சார்பில், கேரளாவில் சுகாதாரத்துறை பொறுப்பை கவனிக்கிற பெண் மந்திரி கே.கே. ஷைலஜா மட்டும் கலந்து கொண்டார்.

    அவர் ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் கேரளா மாதிரி’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஐ.நா. சபையின் ஒரே உலகம் ஒரே சுகாதாரம் என்ற யோசனையை நாங்கள் செயல்படுத்தினோம்.

    2018-ம் ஆண்டு நிபா வைரஸ் தொற்று பரவியபோது கிடைத்த அனுபவம், இப்போது கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாள்வதற்கு உதவியது.

    சீனாவின் வுகானில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதுமே, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கேரளாவில் இந்த வைரஸ் தொற்றை கையாள்வதற்கான பணிகளை தொடங்கி விட்டோம்.

    மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரமும், கண்காணிப்பும் முடுக்கி விடப்பட்டது. கொரோனா பரிசோதனை, நோய் அறிதல், பொது சுகாதார நடைமுறைகள் தொடர்பான நிலையான செயல்பாட்டு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    நிபா வைரஸ் தொற்றில் இருந்து, கொரோனா வைரஸ் விவகாரத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது; பொதுசுகாதார நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதம் செய்யக்கூடாது என்ற அனுபவத்தை மாநிலம் கற்றுக்கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐ.நா. சபையின் இணையவழி கருத்தரங்கில் கொரோனா வைரஸ் தொற்றை கேரளா கையாளும்விதம் பற்றி சுகாதார மந்திரி கே.கே.ஷைலஜா பேசிய தருணம், கேரள இடதுசாரி அரசுக்கு பெருமைமிக்க தருணமாக அமைந்தது.
    Next Story
    ×