search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி

    அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடியாக அறிவுரை வழங்கி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. தினமும் ஐந்து இலக்க அளவில் பாதிப்பு பதிவாகி வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உள்ளது. இந்த தொற்றுக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

    தொடர்ந்து பரவலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ளது.

    அதில், கொரோனா வைரசுக்கான சோதனை அளவுகோலை விரிவுபடுத்தி, அனைத்து அறிகுறி உள்ளவர்களுக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை பரவலாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பரிசோதனைகள் செய்வதும், தொடர்பு தடம் அறிவதும், சிகிச்சை அளிப்பதும்தான் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் ஒரே வழி எனவும் கூறப்பட்டுள்ளது.

    அதில் மேலும் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஊர் திரும்பியோர், இடம் பெயர்ந்தோர் இடையே காய்ச்சல் போன்ற அனைத்து அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் 7 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

    * காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்ட அனைவருக்கும், ‘ஹாட்ஸ்பாட்’ என்று அழைக்கப்படுகிற நோய் தீவிர பகுதிகளில் அல்லது கட்டுப்பாட்டு பகுதிகளில் அறிகுறி உள்ளவர்கள் அனைவருக்கும், கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் குறைப்பு பகுதிகளில் பணியில் உள்ள முன்வரிசை பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்.

    * அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை பிரிவுகள் ‘ஆன்டிபாடி’ அடிப்படையிலான கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு அதிகாரிகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எல்லா கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், அனைத்து மத்திய, மாநில அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளிலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார பராமரிப்புக்கான சான்றிதழ் வழங்கும் தேசிய அங்கீகார வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்துள்ள பரிசோதனை கூடங்களிலும், கொரோனா வைரஸ் தொற்று கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையுடன் சேர்த்து துரித ஆன்டிஜென் கண்டறியும் சோதனைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

    துரித ஆன்டிஜன் சோதனைகளை செய்ய விரும்பும் அனைத்து ஆஸ்பத்திரிகள், பரிசோதனை கூடங்கள், மாநில அரசுகள் தரவு உள்ளட்டுக்கான உள்நுழைவு சான்றுகளை பெறுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

    கொரோனா தொற்றுகளை கண்டறிய பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ள பல்வேறு பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கு அனைத்து மாநில அரசுகளும், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
    Next Story
    ×