search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    தரமான முக கவசம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி

    பெங்களூரு சிக்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபரிடம் தரமான முக கவசம் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
    பெங்களூரு :

    பெங்களூரு சிக்பேட்டையை சேர்ந்தவர் வசந்த், தொழில்அதிபர். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் முக கவசங்களின் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வசந்தும் முக கவசங்களை வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கிடையில், சமீபத்தில் வீரேஷ் மற்றும் மதுகவுடா ஆகிய 2 பேருடன் வசந்திற்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தரமான மற்றும் பிரபல நிறுவனங்களின் முக கவசங்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக வசந்திடம் கூறியுள்ளனர். இதற்கு வசந்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக ராஜராஜேசுவரிநகரில் வைத்து ரூ.50 லட்சத்தை வீரேசிடம் வசந்த் கொடுத்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் வீரேஷ் கொடுத்த சில முக கவசங்கள் வசந்திற்கு பிடித்துவிட்டது.

    அடுத்த ஓரிரு நாட்களில் முக கவசங்கள் வாங்க மேலும் ரூ.50 லட்சத்தை வீரேஷ் வங்கி கணக்குக்கு வசந்த் அனுப்பி வைத்தார். ரூ.1 கோடிக்கு முக கவசங்கள் தருவதாக கூறிய வீரேஷ், மதுகவுடா ஆகியோர் முக கவசங்களை கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை வசந்தால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்கள் 2 பேரும் ஒரு தொலைகாட்சி சேனலில் பணியாற்றியது வசந்திற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜராஜேசுவரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரேஷ், மதுகவுடாவை வலைவீசி தேடிவருகிறார்கள். 
    Next Story
    ×