search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, சீனா கொடி
    X
    இந்தியா, சீனா கொடி

    எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 3-வது நாளாக பேச்சுவார்த்தை

    இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணித்து இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    புதுடெல்லி :

    லடாக்கின் கிழக்கே பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியதால் கடந்த மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாட்டு எல்லை நெடுகிலும் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன், பதற்றமும் அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 6-ந்தேதி ஒருமித்த முடிவை எடுத்தன. அதைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கி வந்தன.

    இந்த பதற்றத்தணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 15-ந்தேதி இரவில் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா தரப்பிலும் 35 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் இருநாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்து உள்ளது. இந்தியா-சீனா இடையேயான 3,488 கி.மீ. எல்லைப்பரப்பும் உச்சபட்ச பதற்றத்தில் உள்ளது.

    ஆனால் எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி மோதல் நடந்த மறுநாளான 16-ந்தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவ மேஜர் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது.

    இதில் அன்று முடிவு எட்டப்படாததால், 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. இரு தரப்புக்கும் இடையே கடந்த 6-ந்தேதி எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு அடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை விலக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தை 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இரு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    இதற்கிடையே எல்லையில் தற்போது ஒட்டுமொத்த நிலவரமும் சீராகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருப்பதாக சீனா கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், ‘லடாக் மோதலுக்குப்பின் இருதரப்பும் ராணுவம் மற்றும் தூதரகம் வழியாக தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பில் உள்ளன. இந்த தீவிர விவகாரத்தை நியாயமான முறையில் கையாள இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. அங்கு விரைவில் அமைதியை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.

    இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த வழிகாட்டுதலின் கீழ், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை கூட்டாகப் பாதுகாத்து, இருதரப்பு உறவுகளின் நல்ல வளர்ச்சிக்கு உழைப்பது தொடர்பான விஷயங்களைக் கையாள முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×