search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேணுகாச்சார்யா
    X
    ரேணுகாச்சார்யா

    டி.கே.சிவக்குமார் தலைவரானது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை: ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

    டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் தலைவரானது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா கூறினார்.
    பெங்களூரு :

    பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    “கர்நாடக காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு டி.கே.சிவக்குமார் மாநில அரசிடம் அனுமதி கேட்டார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், அனுமதி வழங்க முடியாது என்று அரசு கூறியுள்ளது. இதை காங்கிரஸ் தலைவர்கள் குறை கூறியுள்ளனர்.

    நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கர்நாடக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்துவது சரியா?. அவர் கட்சி தலைவராக பதவி ஏற்றவுடன் முதல்-மந்திரி ஆகிவிடுவாரா?. மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் கூறுகிறார்கள். அவர்கள் மாய உலகில் உள்ளனர். அதில் இருந்து அவர்கள் வெளியே வர வேண்டும்.

    டி.கே.சிவக்குமாரை சித்தராமையா ஆதரிப்பதுபோல் தெரிகிறது. ஆனால் உண்மையில் டி.கே.சிவக்குமார் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. பா.ஜனதாவில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார். அவருக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது.”

    இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
    Next Story
    ×