search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேகவுடா டி.கே.சிவக்குமார்
    X
    தேவேகவுடா டி.கே.சிவக்குமார்

    தேவேகவுடாவை ஆதரிப்பதை கர்நாடக காங்கிரஸ் எதிர்க்காது: டி.கே.சிவக்குமார்

    மாநிலங்களவை தேர்தலில் தேவேகவுடாவை ஆதரிப்பதற்கு கர்நாடக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காது என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
    பெங்களுரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    “மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமான தலைவர் அல்ல, அவர் தேசிய அளவில் பிரபலமாக திகழும் தலைவர். அவரிடம் தேசிய தலைவருக்கான குணம் உள்ளது. அதனால் அவர் தேசிய சொத்து. அவர் மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக இருந்தபோது மிக சிறப்பான முறையில் செயல்பட்டார். அவரது அனுபவம் எங்கள் கட்சிக்கு முக்கியமானது.

    அவரது செயல்பாட்டை கவனித்த எங்கள் கட்சியின் பிற மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள், மல்லிகார்ஜுன கார்கேவை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என்று எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். பிற கட்சிகளின் தலைவர்களும் எங்களிடம் பேசி, அவரை எம்.பி.யாக்குமாறு கூறினர்.

    அதனால் எங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்து, ஒருமித்த கருத்து அடிப்படையில் மல்லிகார்ஜுன கார்கேவை தேர்ந்தெடுத்தோம். அதன்படி எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமை, மல்லிகார்ஜுன கார்கேவை வேட்பாளராக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள எங்கள் கட்சியின் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மல்லிகார்ஜுன கார்கேவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க உதவிய சோனியா காந்திக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேவேகவுடாவை ஆதரிப்பதை கர்நாடக காங்கிரசார் எதிர்க்கமாட்டோம். சோனியா காந்தி என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். தேவேகவுடாவை ஆதரிக்கும் விஷயத்தில் தேசிய அளவில் அரசியலை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் யாருடைய தனிப்பட்ட விவகாரமும் வராது. எங்கள் தேசிய தலைவி என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் நடப்போம் என்று நானும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் கூறியுள்ளோம். எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.

    பா.ஜனதாவை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பா.ஜனதாவின் உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும், பா.ஜனதா மந்திரிகள் அல்லது நிர்வாகிகளை சந்திக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன்.”

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×