search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டின் கூரை மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் மாணவி
    X
    வீட்டின் கூரை மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் மாணவி

    சிக்னல் கிடைக்காததால் வீட்டின் கூரை மீது ஏறி படித்த கல்லூரி மாணவி

    கேரளாவில் ஆன்லைன் வகுப்பை கவனிக்க சிக்னல் சரியாக கிடைக்காததால் வீட்டின் கூரை மீது ஏறி படித்த கல்லூரி மாணவிக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் மாணவர்கள் நலன் கருதி அரசு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. ஆன்டிராய்டு செல்போன் மூலம் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். செல்போன் இருந்தாலும் மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சரியாக சிக்னல் கிடைக்காததால் மாணவ, மாணவிகள் சிலருக்கு ஆன்லைன் வகுப்புகளில் எடுக்கப்படும் பாடங்கள் சரியாக தெரியாமல் இருந்தது. மலப்புரம் மாவட்டம் கூத்தக்கல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நமிதா என்பவருக்கும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மாணவி நமிதா, சிக்னல் சரியாக கிடைப்பதற்காக வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்தார்.

    நமீதா வீட்டின் கூரை மீது அமர்ந்து பாடம் படிப்பதை அவரது சகோதரி படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். இந்த படம் வெளியான சில நிமிடங்களில் கேரளா முழுவதும் பரவி வைரலானது. மாணவியின் ஆர்வத்தை பாராட்டியும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டனர். இது அரசின் கவனத்திற்கும் சென்றது.

    இதுபற்றி மாணவி நமிதா கூறும்போது, எங்கள் வீடு மிகவும் தாழ்வான பகுதியில் இருக்கிறது. இங்கு எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற பல மாணவ, மாணவிகளுக்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை.

    வழக்கமாக சிக்னல் கிடைக்காதபோது, நான் வீட்டின் கூரை மீது ஏறி செல்போன் பார்ப்பேன். ஆன்லைன் வகுப்பு தொடங்கிய பின்பு சிக்னல் கிடைக்காததால் நான் வீட்டின் கூரை மீது ஏறினேன். இம்முறை நான் கூரை மீது ஏறி அமர்ந்திருப்பதை சகோதரி படம் எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு உள்ளார்.

    இந்த படத்தை பார்த்து பலரும் பாராட்டினர். கோட்டக்கல் எம்.எல்.ஏ. சையத் அபித் ஹூசேன் தாங்கல், முகமது பஷீர் எம்.பி. ஆகியோரும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். படிப்பின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்திற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இது போல பல செல்போன் நிறுவனங்களும் என்னை தொடர்பு கொண்டனர்.அவர்களின் தொழில் நுட்ப நிபுணர்கள் எங்கள் பகுதிக்கு அதிவேக இணைப்பு கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர். ஒரு நிறுவனம் 3 மாதங்களுக்கு இலவசமாக அதிவேக இணைப்பு கொடுத்துள்ளது. இப்போது என்னால் ஆன்லைன் வகுப்புகளை நன்றாக கவனித்து படிக்க முடிகிறது, என்றார்.
    Next Story
    ×