search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சுழற்சி முறையில் பள்ளிகளை இயக்கலாம்- விஞ்ஞானி கருத்து

    நோய் பரவலை தடுக்க சுழற்சி முறையில் பள்ளிகளை இயக்கலாம் என்று மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை முன்னாள் டைரக்டர் ஜெனரலும், பிரபல விஞ்ஞானியுமான வி.கே. சரஸ்வரத் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிக்கூடம் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனாவால் பள்ளிக் கூடத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த வி‌ஷயத்தில் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது. எனவே ஒவ்வொரு மாநிலமும் பள்ளிக்கூடத்தை எவ்வாறு திறக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை முன்னாள் டைரக்டர் ஜெனரலும், பிரபல விஞ்ஞானியுமான வி.கே. சரஸ்வரத் பள்ளிக் கூடங்களை சுழற்சி முறையில் இயக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

    பள்ளிக் கூடத்தை திறந்தால் நோய் பரவுதல் அதிகமாகி விடும் என்ற அச்சம் இருக்கிறது. இதற்கு முன்பு நடத்தியது போல ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து பள்ளியை நடத்தினால் அது சிக்கலாகத்தான் இருக்கும்.

    எனவே மாணவர்களை பாதியாக குறைக்கும் வகையில் 2 ஷிப்டுகளாக பள்ளிகளை இயக்கலாம். 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை காலை முதல் ஷிப்டாகவும், அதற்கு மேல் உள்ள வகுப்புகளை மாலை ஷிப்டாகவும் நடத்தலாம்.

    ஆனால் இதற்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டியது வரும். தற்போது ஆன்லைன் கல்வி முறையை புகுத்தி இருக்கிறார்கள். இது தொடர்வது நல்லது. இன்னும் முழுமையாக அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம்.

    இந்தியாவை பொறுத்த வரையில் சொற்பொழிவு மூலம் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் முறையே அதிகமாக உள்ளது. இதை குறைத்து செயல்முறை மூலம் கற்றுக்கொடுப்பதை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். எனவே பாடத்திட்டங்களை ஆரம்ப கல்வியில் இருந்து கல்லூரி வரை மாற்றி அமைக்க வேண்டும்.

    இந்தியாவில் உள்ள கல்விமுறை காரணமாக மாணவர்களுக்கு படைப் பாற்றல் திறன் குறைவாக உள்ளது. எனவே படைப் பாற்றலை உருவாக்கும் வகையிலான செயல்முறை பயிற்சி கல்விகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×