search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த கர்ப்பிணி யானை
    X
    உயிரிழந்த கர்ப்பிணி யானை

    கர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது

    அன்னாசி பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் உள்ள அமைதி பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 25-ந்தேதி காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் நின்றது.

    நிலம்பூர் வன அதிகாரி மோகனகிருஷ்ணன் ரோந்து சென்றபோது யானையை கண்டு அதனை மீட்க முயன்றார். யானை ஆற்றை விட்டு வெளியே வர மறுத்து ஆற்றிலேயே நின்று உயிரை விட்டது.

    இறந்து போன யானையை வன அதிகாரிகள் மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இதில் யானைக்கு யாரோ மர்மநபர்கள் அன்னாசி பழத்தில் வெடி மருந்தை மறைத்து வைத்து உண்ண கொடுத்ததும், அதை சாப்பிட்ட யானை வெடிபொருள் வெடித்ததில் வாய் சிதறி படுகாயம் அடைந்து இறந்ததும் தெரிய வந்தது. மேலும் 15 வயது மதிக்கத்தக்க அந்த யானை கர்ப்பமாக இருப்பதையும் கால்நடை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

    பழத்தில் வெடிமருந்து வைத்து யானையை கொன்றது வன விலங்கு ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனிதாபிமானமற்ற இச்செயலுக்கு நாடே கண்டனம் தெரிவித்தது. இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.

    பினராயி விஜயன் உத்தரவுப்படி, பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவவிக்ரம், மன்னார்காடு மண்டல வன அதிகாரி சுனில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் யானையை கொன்றவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீஸ் மற்றும் வனத்துறையினர் அடங்கிய இக்குழுவினர் மன்னார்காடு மற்றும் அமைதி பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். யானை இறந்த இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் சுற்று அளவுக்கு சோதனை நடந்தது.

    மலை கிராமங்களில் அன்னாசி பழத்தோட்டங்கள் வைத்திருப்போர் மற்றும் தோட்டத் தொழிலாளிகள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை தனிப்படையினர் பிடித்தனர்.

    அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். நேற்று மாலை பிடிபட்ட 3 பேரில் 2 பேர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் வெடிபொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மேலும் இதில் தொடர்புடைய நபர்களை போலீசாரும், வனத்துறையினரும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் பலரும் புகார் கூறி வருவதாகவும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி உள்ளார்.

    Next Story
    ×