search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவின் பொருளாதாரம் 22 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சி- சர்வதேச ஆய்வு நிறுவனம் தகவல்

    கொரோனா பாதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் 22 ஆண்டுகள் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் தங்கள் முதலீடுகளை செய்வதற்கு வசதியாக அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ‘மூடி’ நிறுவனம் ஆய்வுகளை அவ்வப்போது வெளியிடும்.

    ஒவ்வொரு நாடும் பொருளாதார ரீதியாக எந்த அளவில் இருக்கிறது. அதனுடைய சக்தி என்ன என்பது போன்றவற்றை குறிக்கும் வகையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்படும்.

    அதன்படி ‘ஏ’ வரிசை, ‘பி’ வரிசை, ‘சி’ வரிசை என பல குறியீடுகளை அது வெளியிடும். ‘ஏ’ வரிசை என்பது முன்னணி இடத்தை குறிப்பதாகும். இந்த வகையில் இந்தியாவின் பொருளாதார நிலையை ‘பி’ வரிசையான பி.ஏ.ஏ.-2 என்று மூடி நிறுவனம் ஏற்கனவே குறியீட்டு இருந்தது.

    இப்போது இந்திய பொருளாதார நிலை கீழ்நிலை குறியீடான பி.ஏ.ஏ.-3 என்ற அளவிற்கு சென்றிருப்பதாக கூறியிருக்கிறது.

    1998-ம் ஆண்டு ஜூன் மாதம் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு பொருளாதார தடை விதித்தன.

    இதனால் இந்தியா பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அப்போது இந்தியாவின் தரத்தை பி.ஏ.ஏ.-2-விலிருந்து பி.ஏ. ஏ.-3-க்கு மாற்றி இருந்தது.

    அதே நிலைக்கு இப்போது வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 22 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது.

    இந்தியா ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் தான் இருந்தது. கொரோனா பாதிப்பு அதை மிக மோசமாக்கி இருப்பதாகவும் மூடி அமைப்பு கூறியிருக்கிறது.

    2016-ம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது. 2019 நிதியாண்டு இறுதியில் அது 4.2 ஆக குறைந்தது. தற்போதைய நிலையில் 4.0 சதவீதமாக இன்னும் வீழ்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    2021-ம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 6 சதவீதம் அளவிற்கு உயர்த்திவிட வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால் பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்கள் சரியாக செயல்படவில்லை. அது மந்த நிலையிலேயே இருந்த காரணத்தால் ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி குறைந்த நிலையிலேயே இருந்தது. இப்போது கொரோனா பிரச்சினை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மிகவும் பின்னடைய செய்திருப்பதாக ஆய்வு நிறுவனம் சொல்லி உள்ளது.

    தற்போது தொழில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா அதிக அளவில் பணத்தை திசை திருப்ப வேண்டியது உள்ளது. ஏற்கனவே இதற்காக பெரும் தொகையை செலவிட்டுள்ளது. ஆனாலும் இதன் பலனை பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்தியாவில் அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் மற்ற வகை வருவாய் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும். எனவே பொருளாதாரம் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கு நீண்ட காலம் ஆகும்.

    இதனால் இந்தியா அதிக கடனை பெற வேண்டியது வரும். அத்துடன் இந்தியாவின் பொருளாதார சக்தி வீழ்ச்சியை நோக்கி இருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    இப்போது வேலை வாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். அதை சரிப்படுத்த வேண்டும். ஏற்கனவே நீண்ட காலமாக பொருளாதார சரிவு இருந்து வருவதை சீர்படுத்துவதிலேயே சரியான முன்னேற்றம் இல்லாத நிலையில் இப்போது எழுந்துள்ள பிரச்சினைகள் கடுமையான பின்னடைவுகளை உருவாக்கும் என்றும் மூடி அமைப்பு கூறியிருக்கிறது.

    Next Story
    ×