search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்குங்கள்: சோனியா காந்தி வேண்டுகோள்

    அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்குமாறு மத்திய அரசுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்
    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு மோசமான பொருளாதார பாதிப்பை சந்தித்து உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மக்களின் அழுகுரல் நாட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கிறது. ஆனால் மத்திய அரசின் காதுகளில் மட்டும் விழவில்லை. மக்களின் வேதனைை-யும், துயரத்தையும் அரசு புரிந்து கொள்ளவில்லை.

    லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு வெறுங்கால்களுடன் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. சுதந்திரம் அடைந்த பிறகு இப்படி ஒரு துயரமான நிலையை நாடு இப்போதுதான் காண்கிறது.

    வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக அங்கும் இங்குமாக சென்று தவிக்கிறார்கள்.

    சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவற்கு பதிலாக நிதி உதவி செய்யுங்கள். அப்போதுதான் வேலைவாய்ப்புகளை பாதுகாத்து, நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    எனவே மத்திய அரசு தனது பணப்பெட்டியை திறந்து மக்களுக்கு உதவவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தின் வங்கி கணக்கிலும் ஒவ்வொரு மாதமும் தலா ரூ.7,500 வீதம் அடுத்த 6 மாதங்களுக்கு செலுத்துங்கள். உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்குங்கள்.

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக பயணம் செய்து தங்கள் சொந்த ஊர்களுக்கு போய்ச் சேருவதை உறுதி செய்யுங்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பும், ரேஷன் பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 நாட்களாக மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.

    மக்களின் துயரங்களை போக்கி, விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களும், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டவர்களும் மத்திய அரசை ஆரம்பம் முதலே வற்புறுத்தி வருகிறார்கள். பிரச்சினைகளின் தீவிரத்தை புரிந்து கொண்டு, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க மறுப்பது ஏன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அதனால்தான் இந்திய மக்கள் எழுப்பும் குரலின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் ‘ஸ்பீக் அப் இந்தியா‘ என்ற பெயரில் சமூக ஊடகத்தில் காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. மக்களின் குரலை வலுப்படுத்த காங்கிரஸ் உதவும். மக்கள் இந்த பிரசாரத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    நெருக்கடியான இந்த காலகட்டத்தில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் ஆதரவாக இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து நெருக்கடியான இந்த காலகட்டத்தில் இருந்து மீண்டு வருவோம்.

    இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.
    Next Story
    ×