search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க முயற்சிப்பவர்களை கவர்னர் கண்டிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சிப்பவர்களை கவர்னர் அழைத்து கண்டிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
    மும்பை :

    நாட்டிலேயே ஆட்கொல்லி கொரோனா வைரசால் மகாராஷ்டிரா தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த பிரச்சினையில் சிவசேனா கூட்டணி அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பாரதீய ஜனதாவை சேர்ந்த நாராயண் ரானே கவர்னரை சந்தித்து வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடியும் பூதாகரமாகி உள்ளது.

    இந்தநிலையில், மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்களை கவர்னர் கண்டிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி அரசாங்கம் 11 நாட்கள் கூட நீடிக்காது என எதிர்க்கட்சி கூறியது. ஆனால் இந்த அரசாங்கம் 6 மாதங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

    கொரோனா பிரச்சினை இல்லாமல் நிலைமை சாதாரணமாக இருந்து இருந்தால், 6 மாதத்தை இந்த அரசாங்கம் நிறைவு செய்திருப்பதை குறிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுக்கு விருந்து வைத்து இருப்போம். இப்போது இந்த அரசு கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் தான் கவனம் செலுத்துகிறது.

    கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ராஜ்பவனுக்கு வரும் விருந்தினர்களை மராட்டிய கலாசாரத்தின்படி நன்றாக நடத்தினார்.

    ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை பின்பற்றி இதுவரை தனது வாழ்க்கையை கழித்த ஒரு புனிதர் அரசியல் சதி திட்டங்களில் ஈடுபடுவார் என நம்ப முடியாது.

    எதிர்க்கட்சி தெரிவித்து வரும் கருத்து மகாராஷ்டிராவின் நலனுக்காக அல்ல. கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிடும் எதிர்க்கட்சியினரை கண்டிக்க வேண்டும்.

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை கோருவது என்பது ஒரு வழக்கமான விவகாரமாகி விட்டது. இதற்கு பதில் அவர்கள் குஜராத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோர வேண்டும். எதிர்க்கட்சியின் பலம் 105 ஆக உள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். ஆனால் ஆளும் கூட்டணி அரசின் பலம் 170 ஆக உள்ளது. இது 200 ஆக அதிகரித்து விட்டால் அவர்கள் (எதிர்க்கட்சி) அரசாங்கத்தை குறை கூறக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×