search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம் (கோப்புப்படம்)
    X
    விமானம் (கோப்புப்படம்)

    இடம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் பீகாருக்கு அனுப்பி வைத்த விவசாயி

    டெல்லியில் ஒரு விவசாயி, தன்னிடம் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வருகிற இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 10 பேரை அவர்களது சொந்த மாநிலமான பீகாருக்கு விமானத்தில் அனுப்பி வைத்தார் என்றால் நம்ப முடிகிறதா?
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்காக நமது நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

    இந்த ஊரடங்கால் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப்போய் விட்டன. பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் முடங்கி விட்டன.

    ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப கடும் அவஸ்தைகளை அனுபவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும், லாரிகளிலும், வழியில் கிடைத்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களில் பலரும் வழியில் விபத்துக்களை சந்தித்து உயிரிழக்கும் கொடுமைகள் வேறு அரங்கேறுகின்றன.

    கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்பு கூட இன்றி குடும்பம் குடும்பமாய் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தார்ச்சாலைகளில் மூட்டையும், முடிச்சுமாய் நடந்து செல்வதை பார்க்கிறபோது நெஞ்சம் பதறுகிறது. இதுபற்றிய தகவல்கள், ஊடகங்களில் தொடர்ந்து வெளியானதை தொடர்ந்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்க தொடங்கியது. இந்த சிறப்பு ரெயில்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இடமில்லை. எனவே இன்னும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிற அவலம் தொடர்கிறது.

    ஆனால் தலைநகர் டெல்லியில் ஒரு விவசாயி, தன்னிடம் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வருகிற இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 10 பேரை அவர்களது சொந்த மாநிலமான பீகாருக்கு விமானத்தில் அனுப்பி வைத்தார் என்றால் நம்ப முடிகிறதா?

    நம்புங்கள். நம்பித்தான் ஆக வேண்டும்.

    அந்த விவசாயி டெல்லியின் திகிப்பூர் கிராமத்தை சேர்ந்த காளான் விவசாயி பாப்பன் சிங்.

    இவரிடம் பீகார் மாநிலம், சமஸ்திப்பூர் பகுதியை சேர்ந்த 10 கூலித்தொழிலாளர்கள் நீண்ட காலமாக வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல விரும்பியபோது, சிறப்பு ரெயில்களில் இடம் கிடைக்கவில்லை.

    தனது தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சைக்கிளிலோ, கால்நடையாகவோ சென்று கஷ்டப்படுவதை பார்க்க பாப்பன் சிங் விரும்பவில்லை.

    10 பேருக்கும் டெல்லியில் இருந்து பீகாரின் தலைநகரான பாட்னாவுக்கு தனது சொந்தச்செலவில் விமான டிக்கெட்டுகளை பாப்பன் சிங் வாங்கித்தந்துள்ளார்.

    இன்று காலை 6 மணிக்கு இந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 10 பேரும் டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு விமானத்தில் சென்றார்கள்.. இது அவர்களது வாழ்வில் ஒரு ஆனந்த அனுபவமாக, சுகானுபவமாக வாய்க்கப்போகிறது. பாப்பன் சிங்கிடம் வேலை பார்க்கும் லகிந்தர் ராம் இதுபற்றி சொல்லும்போது நெகிழ்ந்து போகிறார்.

    “என் வாழ்வில் விமானத்தில் பறப்பேன் என்று நான் கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. ஆனால் எனக்கு அந்த விமான பயணம் இன்று கிடைத்துள்ளது. எனது சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்கு எனக்கு வார்த்தையே இல்லை. ஆனால் விமான நிலையத்தை அடையும்போது அங்கு நான் விமானத்தில் ஏறி பயணிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணும்போது கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கிறது. என்னுடன் என் மகன் வருகிறான்.

    எங்கள் முதலாளிக்கு நாங்கள் எல்லாரும் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எத்தனையோ பேர் பசியுடன், காலில் செருப்பின்றி சொந்த ஊர்களுக்கு நடந்தோ, சைக்கிளிலோ செல்கிறபோது எங்கள் முதலாளி எங்களை விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கிறார் என்றால் சும்மாவா?

    என் மனைவிக்கு நான் விமானத்தில் வரப்போவதை செல்போனில் சொன்னபோது அவள் நம்பவே இல்லை” என்கிறார்.

    50 வயதான இவர் பாப்பன் சிங்கின் பண்ணையில் 27 வருடங்களாக வேலை பார்க்கிறார். இவரது மகன் நவீன்ராம் 8 ஆண்டுகளாக வேலை பார்க்கிறார்.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் வந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்தே இவர்கள் அத்தனைபேருக்கும் உணவும், தங்குமிடமும் தந்து பராமரித்து வந்ததும் பாப்பன் சிங்தான் என்று சொல்கிறார் லகிந்தர் ராம்.

    10 பேர் டெல்லியில் இருந்து பீகாரின் பாட்னாவுக்கு செல்ல விமான டிக்கெட் எவ்வளவு தெரியுமா? 68 ஆயிரம் ரூபாய். இந்த டிக்கெட்டுடன் 10 பேருக்கும் வழிச்செலவுக்கு பாப்பன் சிங் தலா ரூ.3,000 கொடுத்திருக்கிறார்.

    எல்லாவற்றிலும் சிகரம் என்ன தெரியுமா?

    அது, 10 பேரையும் இன்று தனது சொந்த வாகனங்களை கொண்டு பாப்பன் சிங், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு அழைத்துச்சென்று விட்டதுதான்.

    விவசாயி பாப்பன் சிங் என்ன சொல்கிறார்?

    “நான் 1993-ம் ஆண்டு முதல் காளான் சாகுபடி செய்கிறேன். ஆகஸ்டு மாதம் முதல் மார்ச் மாதம் வரை காளான் சீசன்.

    இந்த 10 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரமே பீகாருக்கு போய் இருக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு தடையாக வந்து அமைந்து விட்டது. பலமுறை அவர்களை சிராமிக் சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்க முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. எனது வேலைக்காரர்கள் பல்லாயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று கஷ்டப்பட விட முடியாது. இது அவர்களுக்கு ஆபத்தான பயணமாக அமைந்து விடவும் வாய்ப்பாகி விடும். எனவேதான் அவர்களுக்கு எந்த தொல்லையும் தராமல் விமானத்தில் செல்வதற்கு டிக்கெட் வாங்கி தருவது என்று முடிவு எடுத்து செயல்படுத்துகிறேன். 10 பேருக்கும் முறைப்படி கொரோனா பரிசோதனை செய்து முடித்து விட்டேன். அவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றுக்கொடுத்து விட்டேன். அவர்கள் இனி சுகமாக பயணம் செய்ய முடியும்”,

    இப்படி சொல்லி புன்னகைக்கிறார் பாப்பன் சிங்.

    பாப்பன் சிங் புண்ணியத்தால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 10 பேர் இன்று டெல்லியில் இருந்து பீகாரின் பாட்னா நகருக்கு விமானத்தில் பறந்து போனது ஒரு சிறப்பான நிகழ்வு, அவர்கள் வாழ்வில் இது மறக்க முடியாத பயணம் என்பதை சொல்லத்தேவையில்லை.
    Next Story
    ×