search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது? நிபுணர்கள் தகவல்

    இந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    உலகிலேயே அதிக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவுகிறது.

    ஏற்கனவே 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. 3,700-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இப்போதைக்கு தடுப்பூசி ஒன்றுதான் கண்ணுக்கு எட்டிய நிவாரணமாக தெரிகிறது. உலக நாடுகள் பலவும் இந்த ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி முயற்சிகளுக்கு ஆதரவாக பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது மிக முக்கிய தேவையாக உள்ளது. இந்திய கல்வியாளர்கள், பல்வேறு நிறுவனங்கள், தொழில் துறையினர் இதில் கரம் கோர்த்துள்ளனர். தடுப்பூசி மேம்பாட்டுக்கான பாதைகளை அடையாளம் காண்பதற்கு உயிரி தொழில்நுட்பத்துறை ஒரு மைய ஒருங்கிணைப்பு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் குறித்து அரியானா மாநிலம், பரீதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேசனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல் இயக்குனர் ககன்தீப் காங் கடந்த மாதத்தில் கூறுகையில், “ முன்னணி நிறுவனங்களில் சைடஸ் காடிலா நிறுவனம் 2 தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீரம் இந்தியா நிறுவனம், பயாலஜிக்கல்ஸ் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ், மைன்வாக்ஸ் நிறுவனங்கள் தலா ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன” என குறிப்பிட்டார். இந்த நிறுவனங்களில் சீரம் இந்தியா நிறுவனம், சைடஸ் காடிலா, இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ், பாரத் பயோடெக் ஆகியவற்றை கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நிறுவனங்களில் பட்டியலிட்டுள்ளன.

    முன்னணி வைரஸ் வல்லுனரான சாகித் ஜமீல் கூறுகையில், “இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. குறைந்தது 3 இந்திய நிறுவனங்களான சீரம் இந்தியா நிறுவனம், பாரத் பயோடெக், பயாலஜிக்கல்ஸ் இ ஆகியவை முன்னணியில் உள்ளன. இவை சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுகின்றன” என குறிப்பிட்டார்.

    மேலும், “இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி என்பது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில்தான் எந்தவொரு தடுப்பூசியும் விலங்குகளுக்கு செலுத்திப்பார்க்கும் நிலையை அடையும்” என்றும் கூறினார்.

    இருந்தாலும், இந்திய தடுப்பூசி நிறுவனங்களிடம் நிறைய திறன் மற்றும் நிபுணத்துவம் உள்ளது. இவை கொரோனா தடுப்பூசியை சந்தைக்கு கொண்டு வருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யக்கூடும். நிறுவனங்களும், தொழில் துறையினரும், கட்டுப்பாட்டார்களும் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த அனுபவம் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

    சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் செல்லுலார் மற்றும் மாலிக்குலர் பயாலஜி நிறுவனத்தின் இயக்குனர் ராகேஷ் மிஷ்ரா கூறும்போது, “எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த தருணத்தில் நாம் தடுப்பூசி உருவாக்குவதில் மேம்பட்ட நிலையில் இல்லை, இதில் நிறைய யோசனைகள் உள்ளன. நிறைய நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் சோதித்துப்பார்க்கும் நிலையில் எந்த நிறுவனமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

    அவர் மேலும் கூறுகையில், “பல்வேறு அணுகுமுறைகளுடன் பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் முழு வைரஸ் அல்லது குறிப்பிட்ட புரதத்தை பயன்படுத்த விரும்புவது போன்ற அணுகுமுறையை கொண்டுள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்களுடனும் இந்திய நிறுவனங்கள் ஒத்துழைத்து வருகின்றன. சிலர் 3-ம் கட்ட சோதனைகளுக்கு செல்கின்றனர். இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் தடுப்பூசியை சோதிக்கவில்லை. அவை தயாரிப்பின் முந்தைய மருத்துவ ஆய்வு கட்டத்தில் உள்ளன” என்றும் குறிப்பிட்டார்.

    சீனா மற்றும் அமெரிக்காதான் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் பின்தங்கி உள்ளோம் என்றும் அவர் கோடிட்டுக்காட்டினார்.

    இதையெல்லாம் பார்க்கிறபோது இந்தியாவில் இந்த ஆண்டில் தடுப்பூசி உருவாக்கி சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவு. ஆனால் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கிற நிலை உள்ளதால், அவை தடுப்பூசிகளை சந்தைக்கு கொண்டு வருவதில் முந்திக்கொள்ளும்.
    Next Story
    ×