search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    சினிமா படப்பிடிப்பை மீண்டும் தொடங்க செயல் திட்டம்: உத்தவ் தாக்கரே

    சினிமா படபிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு செயல் திட்டத்தை தயாரிக்கும்படி திரைப்பட துறைக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுரை வழங்கினார்.
    மும்பை :

    இந்தி மற்றும் மராத்தி திரையுலகின் தலைநகரமான மும்பையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாத பிற்பகுதியில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக சுமார் 70 இந்தி சினிமா, 40 மராத்தி சினிமா மற்றும் 10 வெப்தொடர்களுக்கான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

    இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நேற்று சினிமா, தியேட்டர் மற்றும் தொலைக்காட்சி ஆகிய பொழுதுபோக்கு துறை பிரதிநிதிகள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை மும்பையில் சந்தித்து பேசினார்கள்.

    இதில் சினிமா படபிடிப்புகள் மற்றும் அதற்கு பிந்தைய பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் திரைப்படத்துறைக்கான ஜி.எஸ்.டி.யை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    அப்போது, சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றி சினிமா படப்பிடிப்பு மற்றும் அதற்கு பிந்தைய நடவடிக்கைகளை தொடங்க செயல் திட்டத்தை தயாரிக்கும்படி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இதன்படி மாநிலத்தில் சிவப்பு அல்லாத மண்டலங்களில் படப்பிடிப்பு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். அதே நேரத்தில் சினிமா படப்பிடிப்புக்கான இடம் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இல்லை என்பதையும், செட்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் தொழில்கள், வர்த்தகம் மற்றும் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர்த்து மாநிலத்தில் வணிக நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான பொழுதுபோக்கு துறையில் நடிகர்கள், மேடைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் உள்ளனர்.

    திரைப்பட நகரில் அமைக்கப்பட்டு இருக்கும் படப்பிடிப்பு செட்களுக்காக தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாடகை சலுகைகளை வழங்குவதற்கும், கலைஞர்களுக்கு உதவுவது குறித்தும் அரசு பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின் போது திரையரங்குகளை திறக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிராகரித்தார்.
    Next Story
    ×