search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாள மற்றும் இந்திய பிரதமர்கள் (கோப்பு படம்)
    X
    நேபாள மற்றும் இந்திய பிரதமர்கள் (கோப்பு படம்)

    உங்களின் புதிய எல்லை வரைபடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனம்

    இந்தியாவுக்கு சொந்தமான இடங்களை தங்கள் நாட்டின் வரைபடத்தில் இணைத்துள்ள நேபாள அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவுடன் நேபாளம் 1,800 கிலோ மீட்டர் தூரத்தை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்தியாவின் நட்பு நாடாக இருந்த நேபாளம் தற்போது அந்த நிலைபாட்டில் இருந்து மாறி வருகிறது. 

    இதற்கிடையில், உத்திரகாண்ட் மாநிலத்தின் கைலாஷ் பகுதியில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மன்சர்வ் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் பகுதியை இணைக்கும் விதமாக சாலையை மத்திய அரசு திறந்தது. 

    இந்த சாலையை இந்தியா திறந்ததற்கு நேபாள வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. மேலும், இப்பகுதி தங்களுக்கு சொந்தமான இடம் எனவும் இதை கண்டிப்பாக மீட்போம் எனவும் நேபாள பிரதமர் தெரிவித்தார். 

    மேலும், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகளான  லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாக சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

    இது குறித்து நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஒலி,  “ ராஜ்ய ரீதியில் அந்தப்பகுதிகளை மீண்டும் பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.  இந்தப்பிரச்சினை ஓயும் வரை மங்கிப்போகாது. இந்த விவகாரத்தில் யார் வருத்தம் அடைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எந்த விலை கொடுத்தாவது அந்தப்பகுதிகளை மீட்போம்” என்றார். 

    நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடம்

    மேலும், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கூறுகையில், 

    "லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலாபானி ஆகிய பகுதிகள்  நேபாளத்தின் பகுதிகளாகும், மேலும் இந்த பிரதேசங்களை மீட்பதற்கு உறுதியான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நேபாளத்தின் அனைத்து பகுதிகளையும் இணைத்து அதன்படி நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியிடப்படும்.

    நேபாளத்தின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்க நேபாள அரசு உறுதிபூண்டுள்ளது" என்றும், "இந்தியாவுடனான நிலுவையில் உள்ள எல்லை மோதல்கள் கிடைக்கக்கூடிய வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள், உண்மைகள் மற்றும் சான்றுகள் ஆகியவற்றை நம்பியுள்ள இராஜதந்திர ஊடகம் மூலம் தீர்க்கப்படும்" என்றும் விளக்கினார்.

    இதற்கிடையில், நேபாளத்தின் புதிய எல்லை வரைபடம் தற்போது வெளியிடப்பட்டது. இந்த வரைபடத்தில் இந்தியாவின் உத்திரகாண்ட் மாநிலத்தின் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இருந்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே ராஜாங்க ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேபாள அரசு வெளியிட்டுள்ள புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    நேபாள அரசு இன்று வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

    இந்த தன்னிச்சையான முடிவு வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை. மேலும், இந்த செயல் பேச்சுவார்த்தை மூலம் எல்லைப்பிரச்சைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளது. 

    எல்லை உரிமைகோரும் விவகாரத்தில் நேபாள அரசு மேற்கொண்டுள்ள இத்தகைய செயற்கையான எல்லை விரிவாக்கத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளாது. இந்த விவகாரத்தில் நேபாள அரசுக்கு இந்தியாவின் நிலைபாடு பற்றி நன்கு தெரியும். 

    ஆகையால், இத்தகைய நியாயப்படுத்தப்படாத வரைபடக் கூற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும் என நேபாள அரசை இந்தியா கேட்டுக்கொள்கிறது. மேலும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நேபாளம் மதிக்க வேண்டும்.

    நேபாளம் தனது வரைபடத்தில் இணைத்துள்ள இந்திய பகுதி

    இந்த நிலுவையில் உள்ள எல்லைப்பிரச்சனையை ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான சாதகமான சூழ்நிலையை நேபாள அரசு உறுவாக்கும் என நம்புகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    நடந்துகொண்டிருக்கும் சர்ச்சை புதியதல்ல, 1816 ஆம் ஆண்டு சுகோலி உடன்படிக்கையின் கீழ், நேபாள மன்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை பிரிட்டிசாரிடம் கலாபானி மற்றும் லிபுலேக் உள்ளிட்டவற்றை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×