search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    முதல்-மந்திரி பதவியை தக்க வைத்தார் உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிரா மேல்-சபை உறுப்பினராக உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அவர் தனது முதல்-மந்திரி பதவியை தக்க வைத்துகொண்டார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவி பிரச்சினையில் பாரதீய ஜனதாவுடனான 30 ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்டு, அரசியல் பரம எதிரிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    எம்.எல்.ஏ.வாகவோ, மேல்-சபை உறுப்பினரான எம்.எல்.சி. ஆகவோ இல்லாமல் முதல்-மந்திரி பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்கு மாநிலத்தில் காலியாக இருந்த 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு கடந்த மாதம் நடைபெற இருந்த தேர்தலுக்காக காத்திருந்தார்.

    ஆனால் கொரோனா காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

    இதையடுத்து கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் 2 எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரி மாநில மந்திரிசபை 2 முறை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு பரிந்துரை செய்தது.

    ஆனால் மந்திரிசபை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, கொரோனா ஊரடங்கு தளர்வை சுட்டிக் காட்டி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட 9 எம்.எல்.சி. பதவிகளுக்கும் தேர்தலை நடத்தும்படி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார்.

    இதை ஏற்று தேர்தல் கமிஷன் வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதன் மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள வழிபிறந்தது. இதையடுத்து சிவசேனா வேட்பாளராக உத்தவ் தாக்கரே மற்றும் அக்கட்சியை சேர்ந்த தற்போதைய மேல்-சபை துணை தலைவர் நீலம்கோரே அறிவிக்கப்பட்டனர். தேசியவாத காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 1 வேட்பாளரையும் அறிவித்தது.

    எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா 4 வேட்பாளர்களை களம் இறக்கியது. அரசியல் கட்சிகள் சார்பில் 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு 9 வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டதால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உண்டானதுடன் 21-ந் தேதி நடைபெறுவதாக இருந்த வாக்குப்பதிவுக்கும் அவசியம் இல்லாமல் போனது.

    இதன்படி நேற்று வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட 9 வேட்பாளர்களும் மேல்-சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

    இதன் மூலம் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

    உத்தவ் தாக்கரே தவிர சிவசேனா சார்பில் நீலம் கோரே, பாரதீய ஜனதா சார்பில் ரஞ்சித்சிங் மோகிதே பாட்டீல், கோபிசந்த் படல்கர், பிரவீன் தட்கே, ரமேஷ் கராத், தேசியவாத காங்கிரசின் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மித்காரி, காங்கிரசின் ராஜேஷ் ரத்தோடு ஆகியோரும் எம்.எல்.சி.க்கள் ஆகி உள்ளனர்.
    Next Story
    ×