search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வக சோதனை
    X
    கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வக சோதனை

    மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 70 சதவீத மக்களை கொரோனா தாக்கும்- அமெரிக்க பேராசிரியர் எச்சரிக்கை

    உலக மக்கள் தொகையில் 60-70 சதவீதம் பேர் கொரோனா வைரசிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெறும் வரை, வைரஸ் பரவல் முடிவடையாது என அமெரிக்க பேராசிரியர் கூறியுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், வைரசின் தாக்கம் குறையவில்லை. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை பின்பற்றியே நோயாளிகளை குணப்படுத்துகின்றனர். 

    இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள இந்திய சுகாதார மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎச்எம்ஆர்) சார்பில் இணையதளம் வாயிலாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம் மற்றும் மீட்பு கொள்கை தொடர்பாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் உலகம் முழுவதிலும் இருந்து 722 பேர் பங்கேற்றனர். 

    இந்த கருத்தரங்கில் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ஜான்ஸ் புளூம்பெர்க் பொது சுகாதார பள்ளியின் பேராசிரியர் டேவிட் பிஷாய் பேசுகையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால், உலகின் 70 சதவீதம் வரையிலான மக்களை கொரோனா தாக்கும் என கூறினார்.

    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

    ‘உலக மக்கள் தொகையில் 60-70 சதவீதம் பேர் கொரோனா வைரசிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெறும் வரை, வைரஸ் பரவல் முடிவடையாது. ஏனென்றால் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்க 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம்’ என அவர் குறிப்பிட்டார்.

    “அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டால், அது இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும். குறிப்பாக சுகாதாரத் துறையிடம் நிதி மற்றும் தற்போதுள்ள சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதற்கு கிடைக்கும் மனித வளம் போதுமானதாக இருக்காது. 

    ஆரோக்கியம் என்பது நிலையான வளர்ச்சியின் மிக முக்கியமான தூண்களில் ஒன்று. மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தியா சுகாதார உள்கட்டமைப்பிற்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

    கொரோனா தாக்கத்திற்கு பிறகு பிறகு வங்கிகளில் இருந்து தொடர்ந்து கடன்கள் கிடைப்பதை உறுதி செய்து, சிறு வணிகத்தை மீட்டெடுப்பது தான் உடனடி தேவை. இதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். 

    ஊரடங்கு காலத்தில், 92.5 சதவீத தொழிலாளர்கள் 1 முதல் 4 வாரங்கள் வரை தங்கள் வேலையை இழந்துள்ளனர். எனவே உள்ளூர் மக்கள்தொகை, சமூக மற்றும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அரசாங்கம் உடனடி கொள்கைகளை வகுக்க வேண்டும்’ என்றும் பேராசிரியர்  டேவிட் பிஷாய் கூறினார்.
    Next Story
    ×