search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 7,740 இடங்களில் ஏற்பாடு- மத்திய அரசு தகவல்

    நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 483 மாவட்டங்களில் 7,740 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஊரடங்குக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமாக உள்ளது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:-

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 483 மாவட்டங்களில் 7.740 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகளும், சிறப்பு மையங்களும் அடங்கும்.

    இவை 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா ஆஸ்பத்திரி, அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா சுகாதார மையம், அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா பராமரிப்பு மையம் ஆகும்.

    இவற்றில் மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரத்து 769 தனி படுக்கைகள் போடப்பட்டுள்ளன.

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 567 படுக்கைகளும், கொரோனா தொற்று தாக்குதல் சந்தேகிக்கப்படுகிற நபர்களுக்கு 3 லட்சத்து 51 ஆயிரத்து 204 படுக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 492 ஆகவும், ஆக்சிஜன் பன்மடங்கு வசதி கொண்ட படுக்கைகள் எண்ணிக்கை 1,696 ஆகவும், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 76 ஆகவும் இருக்கும்.

    தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் சோதனை திறனை மேலும் அதிகரிக்க ஏற்ற விதத்தில், ஒரு உயர் செயல்திறன் எந்திரத்தை கொள்முதல் செய்வதற்கு அதிகாரம் பெற்ற குழு செய்த பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் கோபாஸ் சோதனை எந்திரம் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.

    தற்போது இங்கு தினசரி 300-350 சோதனைகளை கோபாஸ் எந்திரம் மூலம் நடத்தும் வசதி உள்ளது. இந்த வசதி, 24 மணி நேரத்தில் 1,200 மாதிரிகளை சோதிக்கும் அளவுக்கு மேம்படுத்தப்படும்.

    கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,511 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணம் அடையும் விகிதாசாரம் 30.76 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 128 பேர் இறந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2,109 ஆக உள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று 3,277 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆக இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×