search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    வங்காளதேச எல்லை வழியாக சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் - மம்தா அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு

    வங்காளதேச எல்லை வழியாக சரக்கு போக்குவரத்தை தாமதம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று மேற்கு வங்காளத்தில் உள்ள மம்தா அரசை மத்திய அரசு கண் டிப்புடன் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், அந்த மாநில கவர்னர் ஜெகதீப் தாங்கருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

    இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக நாடு முழுவதும் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்கு வங்காளத்தில் இந்திய, வங்காள தேச எல்லையில் சரக்கு போக்குவரத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    இதனால் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    மத்திய அரசு


    இதையொட்டி மேற்கு வங்காள அரசின் தலைமைச்செயலாளர் ராஜிவா சின்காவுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா காரசாரமாக ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்திய, வங்காள தேச எல்லை வழியாக சரக்கு போக்குவரத்துக்கு மேற்கு வங்காள மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்த வகையில் மத்திய அரசு தொடர்ந்து மீண்டும் மீண்டும் வழங்கி வந்த வழிமுறைகளை மாநில அரசு செயல்படுத்த வில்லை. இது பேரழிவு மேலாண்மை சட்டத்தை மீறும் செயல் ஆகும்.

    ஏப்ரல் 24-ந் தேதி அத்தியாவசிய சரக்கு போக்குவரத்தை இந்திய நேபாள, இந்திய பூடான், இந்திய வங்காளதேச எல்லை வழியாக அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

    ஆனால் இதை ஏற்று செயல்படுத்துவது தொடர்பான இணக்க அறிக்கை மாநில அரசிடம் இருந்து வரவில்லை.

    இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையேயான எல்லைவழியாக சரக்கு போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே சிக்கி உள்ளன.

    அந்த வாகனங்களின் டிரைவர்கள் பலர் வங்காளதேசத்தில் இருந்து திரும்பும்போது, அவர்கள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வர அனுமதி தரப்படவில்லை.

    ஊரடங்கையொட்டி வழங்கப்பட்ட புதிய வழிகாட்டுதல்களில், எந்த ஒரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையில் சரக்கு போக்குவரத்தை நிறுத்தி வைக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள மாநில அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையானது, அத்தியாவசிய பொருட்களை எல்லை தாண்டி எடுத்து செல்ல விடாமல் நிறுத்துவது இந்திய அரசாங்கம், அதன் சர்வதேச அளவிலான சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றுவதில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

    மேற்கு வங்காள மாநில அரசின் இந்தச்செயல், பேரழிவு மேலாண்மை சட்டம் 2005 மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவுகள் 253, 256, 257 ஆகியவற்றை மீறுவதாகும். எனவே இந்திய, வங்காள தேச எல்லை தாண்டி சரக்கு போக்குவரத்து நடைபெறுவதை மேற்கு வங்காள மாநில அரசு எந்த தாமதமும் இன்றி அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக இணக்க அறிக்கையை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் மத்திய உள்துறைச்செயலாளர் அஜய் பல்லா, மேற்கு வங்காள மாநில அரசு தலைமைச்செயலாளர் ராஜிவா சின்காவுக்கு கண்டிப்புடன் கூறி உள்ளார்.
    Next Story
    ×