search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ
    X
    சிபிஎஸ்இ

    10, 12ம் வகுப்புகளுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்- சிபிஎஸ்இ திட்டவட்டம்

    கொரோனா வைரசால் நிறுத்தப்பட்ட 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு,  அரசு  பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நிறுத்தப்பட்டன. வைரசின் தாக்கம் குறைந்தால் மட்டுமே தேர்வுகளை நடத்த முடியும். 

    எனவே, இந்த ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ கூறியிருந்தது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என சிபிஎஸ்இ மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. 

    இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு முடிந்து நிலைமை சரியான பின்னர் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்கும் வகையில், தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    1-4-2020 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டதைப் போலவே, 10ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், தேர்வு நடக்காத பாடங்களுக்கு உள்மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×