search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா பரவுதல்- இந்திய இளைஞர்களை அதிகம் தாக்கும் அபாயம்

    இந்தியாவில் 15 வயதில் இருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்கள் உழைப்பில் ஈடுபடுபவர்களாக உள்ளதால் இவர்களில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கும் அபாயம் உள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து லண்டனில் உள்ள ஹைஜின் மற்றும் டிராபிக்கல் மெடிசன் கல்வி மையத்தினர் கொரோனா பாதிப்பு தொடர்பாக உலகளாவிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதில் கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இந்த நோய் பரவுதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    உலக மக்கள் தொகையில் 170 கோடி பேர் இதனால் பாதிப்படைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் 22 சதவீதம் ஆகும்.

    மேலும் வயது அடிப்படையில் பார்க்கும்போது 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 10 சதவீதம் பேரும், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் 33 சதவீதம் பேரும், 70 வயதுக்கு உட்பட்டவர்கள் 66 சதவீதம் பேரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அதாவது உழைக்கும் வயதில் இருப்பவர்கள் பெரும்பாலோர் இந்த நோய்க்கு ஆளாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரையில் 15 வயதில் இருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்கள் உழைப்புகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 30 சதவீதம் பேருக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் பாதிப்புக்கு ஆளாகும் நிலைக்கு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-

    கொரோனா மிக தீவிரமான நோய் என்று சொல்ல முடியாது. பாதிக்கப்பட்ட நோயாளிகளை 95 சதவீதம் பேரை உயிரிழப்பில் இருந்து மீட்க முடியும். பல உயிரிழப்புகள் நோயின் தாக்கத்தாலும், வேறு சில பிரச்சினைகளாலும் ஏற்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு ஆதரவான கவனிப்பு மட்டுமே தேவைப்படுகிறது. 20 சதவீதம் பேருக்கு மேம்பட்ட கவனம் தேவைப்படும்.

    5 சதவீதம் பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் தேவை. 15 சதவீதம் பேருக்கு வென்டிலேட்டர்களைவிட மேம்பட்ட ஆக்சிஜன் சப்போர்ட் தேவைப்படுகிறது. கொரோனா நோயாளிகள் மரணம் அடைவதற்கு மன உளைச்சலும் முக்கியமான காரணமாக இருக்கிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவரும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும் உடனடி பிரச்சினைகளாலும் மற்றவர்கள் அவர்களை ஒதுக்குவதாலும் ஒருவித மன உளைச்சல் ஏற்படுகிறது.

    தங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். இதுபோன்ற மன பாதிப்பு மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    எனவே கொரோனா நோயாளிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×