search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலாவ் சாதம்
    X
    புலாவ் சாதம்

    மும்பையில் தினமும் 35 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் தமிழ் போலீஸ் அதிகாரி

    கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் 35 ஆயிரம் ஏழைகளுக்கு தினமும் ஓய்வுபெற்ற தமிழ் போலீஸ் அதிகாரி உணவு வழங்கி வருகிறார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்றவர் டி.சிவானந்தன். தமிழரான இவர், மும்பை போலீஸ் கமிஷனராகவும் பணிபுரிந்தவர். மும்பை பெருநகரத்தில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் தவிக்கும் ஏழைகளின் பசியை போக்கும் முயற்சியாக சிவானந்தன் கடந்த 2018-ம் ஆண்டு ரொட்டி வங்கி என்ற அமைப்பை தொடங்கினார்.

    இந்த அமைப்பு திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மிச்சமாகும் உணவுகளை வீணாக்காமல் ஏழைகளிடம் கொண்டு சேர்த்து பலரது பசியை போக்கி வருகிறது.

    இந்தநிலையில், தற்போது கொரோனா ஊரடங்கால் மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உணவு இன்றி தவிக்கும் சுமார் 35 ஆயிரம் பேருக்கும், நாக்பூரில் 2 ஆயிரத்து 500 பேருக்கும் தினமும் உணவளித்து பசியாற செய்து வருகிறது, சிவானந்தனின் ரொட்டி வங்கி அமைப்பு.

    இதுகுறித்து ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. டி.சிவானந்தன் கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கிற்கு முன் எங்களது அமைப்பு மூலம் தினமும் மும்பையில் 4 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வந்தோம். ஆனால் தற்போது தேவை அதிகரித்து உள்ளது. இதை நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். புலாவ் சாதம் மற்றும் பருப்பு கிச்சடி செய்து உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு வழங்கி வருகிறோம்.

    கொரோனா அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள தாராவி குடிசை பகுதியிலும் சமூக விலகலை பின்பற்றி தேவைப்படுவோருக்கு உணவு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த முயற்சிக்கு போலீசாரும் உதவுகிறார்கள்.

    மும்பை ரொட்டி வங்கிக்கு செம்பூர் மாஹூல், தாதர், போரிவிலி உள்பட 4 இடங்களில் சமையலறைகள் உள்ளன. எனது கேட்டரிங் நிறுவன நண்பர் ஒருவரும் உணவு கொடுத்து உதவி வருகிறார்.

    இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுடன் சேர்ந்து 45 முதல் 50 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக பணியாற்றி வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×