search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும்: பிரியங்கா கோரிக்கை

    ஊரடங்கின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரியங்கா கோரிக்கை விடுத்து உள்ளார்.
    புதுடெல்லி :

    டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில் கூறியதாவது:

    கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் மாநில எல்லைகளில் தவிக்கிறார்கள்.

    நாட்டில் கொரோனா வைரசை ஒழிக்க போராட வேண்டியது அவசியம் என்றபோதிலும், இதுபோன்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

    எனவே வெளிமாநிலங் களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பரிசோதனைகள்் நடத்திய பிறகு, அவர்கள் தங்கள்் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முதல்-மந்திரிகள்் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), புபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தங்கள் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

    அசோக் கெலாட் பேசுகையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றால், கொரோனாவுக்கு எதிரான போர் பலவீனமடைந்து விடும் என்று கூறியதோடு, ஊரடங்குக்கு பின்னால் மாநிலங்களில் எப்படி இயல்புநிலை திரும்பும்? என்றும் கேள்்வி எழுப்பினார்.

    அமரிந்தர் சிங் பேசுகையில், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ.4,400 கோடி ஜி.எஸ்.டி. வரி வருவாய் பஞ்சாப் மாநிலத்துக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றார்.

    புபேஷ் பாகல் பேசுகையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் நிதி வழங்கவில்லை என்றால் கொரோனாவுக்கு எதிரான போர் தோல்வி அடைந்துவிடும் என்றார்.

    நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். ஜி.எஸ்.டி தொகையான ரூ.600 கோடியையும், நிதி கமிஷனின் பங்களிப்பான ரூ.2,200 கோடியையும் மத்திய அரசு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×