search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை - சோனியா காந்தி குற்றச்சாட்டு

    மே 3-ந் தேதிக்கு பிறகு நிலைமையை எப்படி கையாளுவது? என்பது பற்றி மத்திய அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சோனியாகாந்தி பேசுகையில் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. விவசாயிகள், கட்டிட தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மற்றும் தொழில், வர்த்தகம் என்று பல்வேறு துறைகளில் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டு உள்்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    அதற்கு தீர்வு காணும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு யோசனைகளை தெரிவித்து பிரதமருக்கு நான் பலமுறை கடிதம் எழுதி இருக்கிறேன்.

    நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு தீர்வு காண மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயல்பட காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத்திய அரசு காங்கிரஸ் தெரிவிக்கும் யோசனைகளை பொருட்படுத்தாமல், பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு தீர்வு காண பரந்த மனப்பான்மையுடன் செயல்பட முன்வர வேண்டும்.

    கொரோனா நோய்க்கிருமி பரவலின் காரணமாக நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில், பாரதீய ஜனதா சமூகத்தினரிடையே வெறுப்பு வைரசை பரப்பி வருகிறது.

    தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வருகிற மே 3-ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், அதற்கு பின் நிலைமையை கையாளுவது எப்படி? என்பது பற்றி மத்திய அரசிடம் எந்த திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. முழுஅடைப்பு காலகட்டம் முடிந்த பிறகு நிலைமை மேலும் மோசமாக வாய்ப்பு உள்ளது.

    கொரோனாவை கண்டறிவதற்கான மாற்று பரிசோதனை முறைகளோ, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான சரியான திட்டங்களோ இல்லை. துரதிருஷ்டவசமாக குறைந்த அளவிலேயே சோதனைகள் நடத்தப்படுகின்றன. பரிசோதனை கருவிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுகிறது. இருக்கும் கருவிகளின் தரமும் மோசமாக உள்ளது.

    மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்களிடம் போய்ச் சேரவேண்டிய உணவு தானியங்கள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு தானியங்களை பெறவேண்டிய நிலையில் இருக்கும் 11 கோடி மக்கள், பொதுவினியோக திட்டத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ உணவு தானியங்கள், 1 கிலோ பருப்பு, அரை கிலோ சர்க்கரை வழங்க வேண்டும்.

    முதற்கட்ட ஊரடங்கின் காரணமாக 12 கோடி பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள். பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி இருப்பதால் வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும்

    எனவே ஊரடங்கின் காரணமாக வேலையின்றி தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு மற்றும் நிதி பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

    விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் விவசாய விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்ததுறையின் மூலம் மட்டும் 11 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். எனவே இந்த துறையை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    கொரோனாவை ஒழிக்க பாடுபடும் டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அனைத்து அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் கொரோனாவை ஒழிக்க அங்குள்ள அரசுகள் ஓய்வின்றி போராடுகின்றன. இதேபோல் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களும் பாடுபடுகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

    பின்னர் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, சாதி, மதம், இனம், ஆண்-பெண் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எனவே இதை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில் மீதம்உள்ள நாட்களில், ஊரடங்குக்கு பின்னர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை சந்திப்பதற்கு தேவையான அதிகாரங்களை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×