search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பணமதிப்பு
    X
    இந்திய பணமதிப்பு

    ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 செலுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு

    ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஒரு குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

    இந்நிலையில், இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மன்மோகன்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிவடைந்த பிறகு, மற்றொரு உறுப்பினரான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் காணொலி காட்சி மூலம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ்

    சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டுதல், தானிய கொள்முதல், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதித்தோம்.

    சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர். ஏனென்றால், நாட்டில் ஏராளமான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியது, இத்துறை ஆகும். ஆகவே, இத்துறைக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்டத்தை காங்கிரஸ் வகுத்துள்ளது. ஓரிரு நாளில் அதை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

    சுமுகமான தானிய கொள்முதலை உறுதி செய்யவும், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் சாதகமான சிபாரிசுகளை அளிக்குமாறு மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், நேரடியாக வரவு வைக்கும் முறையில் ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த குழு சிபாரிசு செய்துள்ளது.

    ஜன்தன் வங்கிக்கணக்குகள், அனைத்து ஓய்வூதிய கணக்குகள், பிரதமர்-கிசான் திட்ட கணக்குகள் ஆகியவற்றில் இப்பணத்தை செலுத்த வேண்டும்.
    கருணையுள்ள, பொறுப்பான அரசாக இருந்தால், இந்த நிதிக்கு ஏற்பாடு செய்யும்.

    மத்தியபிரதேசத்தில் ஆட்சியை கவிழ்ப்பதில் கவனம் செலுத்தியதால், கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய அரசு தாமதம் செய்தது. இப்போதாவது, காங்கிரஸ் குழு அளிக்கும் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம். மராட்டிய மாநிலம் பால்கார் மாவட்டத்தில், திருடர் என்ற சந்தேகத்தில் 3 பேர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கூட பா.ஜனதா அரசியல் செய்து வருகிறது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார். 
    Next Story
    ×