search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி
    X
    வருமான வரி

    மத்திய அரசு அறிவித்த சலுகைகளை பெற வருமானவரி படிவங்களில் திருத்தம்

    மத்திய அரசு அறிவித்த காலநீட்டிப்பு சலுகைகளை பெறுவதற்காக வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
    புதுடெல்லி:

    பொதுவாக, வருமான வரி படிவங்கள், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியே வெளியிடப்பட்டு விட்டன.

    இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக, வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்கு மத்திய அரசு சில காலநீட்டிப்பு சலுகைகள் அறிவித்தது.

    அதன்படி, 80சி (எல்.ஐ.சி., தேசிய சிறுசேமிப்பு பத்திரம், பொது வைப்புநிதி போன்றவை), 80டி (மெடிகிளைம்), 80ஜி (நன்கொடை) ஆகிய பிரிவுகளின் கீழ் வரிக்கழிவு பெறுவதற்கான முதலீடுகளை மேற்கொள்ளும் கால அவகாசத்தை மார்ச் 31-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதிவரை மத்திய அரசு நீட்டித்தது.

    மத்திய அரசு

    இந்த சலுகையை வருமானவரி செலுத்துவோர் முழுமையாக பெற வசதியாக, ஏற்கனவே வெளியிடப்பட்ட வருமானவரி படிவங்களை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து வருமானவரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதிவரை செய்யும் முதலீடுகளை கணக்கு காட்டி வரிக்கழிவு கோரி சலுகை பெறுவதற்காக, வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    திருத்தம் செய்யப்பட்ட படிவங்கள், இம்மாத இறுதியில் வெளியிடப்படும். கணக்கு தாக்கல் செய்யும் வசதி, மே 31-ந்தேதிக்குள் அளிக்கப்படும்.

    படிவங்கள் திருத்தத்துக்கு ஏற்ப மென்பொருளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×