search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா தாக்கினால் ஆபத்து- மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

    பாலியல் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால், அது ஆபத்தானது என்று பிரபல மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார்.
    கொல்கத்தா:

    நமது நாட்டில் விபசாரம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல மாநகரங்களில் குறுகிய பாதைகளில், சந்துகளில் சட்ட விரோதமாக விபசாரம் நடக்கிறது.

    இந்தியாவில் வணிக ரீதியிலான விபசாரத்தில் ஏறத்தாழ 1 கோடி பெண் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 1.6 சதவீதத்தில் பால்வினை நோய்கள், எய்ட்ஸ், காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரம், 2017 நிலவரம் ஆகும். இதை 2018-ம் ஆண்டு ஒரு ஆய்வின்போது ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

    இப்போது நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாலியல் தொழிலாளர்கள் துன்பத்தில் வாடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர்களின் அடிப்படை தேவைகளை செய்து தருமாறு மாநில அரசுகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் என்ன ஆகும் என்பது குறித்து மருத்துவ நிபுணரும், கொல்கத்தாவில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி சிறப்பு பேராசிரியருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது:-

    பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஏற்கனவே நோய்கள் இருந்தால், கொரோனா வைரஸ் தொற்றுநோயும் தாக்குகிறபோது நிலைமை மோசமாகி விடும். கொரோனா வைரஸ் தாக்குகிறபோது 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் தோன்றும். அவர்கள் உடலில் உள்ள ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பு பொருள்), நோயை எதிர்க்கத் தொடங்கி விடும்.

    அதே நேரத்தில் ஏற்கனவே பால்வினை நோய்களோ, எய்ட்ஸ் நோயோ, காசநோயோ இருந்திருந்தால், அவர்களை கொரோனா வைரஸ் தாக்குகிறபோது அது ஆபத்தானது. கடுமையான அறிகுறிகள் தோன்றும். மரணமும் நிகழும்.

    கொரோனா வைரஸ் ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா சோனாகச்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 5 லட்சம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதுமே பெண் பாலியல் தொழிலாளர்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவது நின்று போய்விட்டது. தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அவர்கள் சிரமப்படுகிற நிலை வந்துள்ளது.

    சோனாகச்சி பகுதியில் மட்டுமே தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அது இப்போது நின்று போய் இருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களில் பாதிபேர் விபசார தொழிலையே நம்பி உள்ளனர். காப்பீடு கூட செய்து கொள்வதில்லை. தமிழ்நாட்டில் 5-ல் 2 பேரும், கர்நாடகத்தில் 5-ல் ஒருவரும் இந்த நிலையில்தான் உள்ளனர்.

    தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் 31 சதவீத பாலியல் தொழிலாளர்கள் நிதி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் உள்ளனர். நோயுற்றால் சிகிச்சை கூட பெறுவதில்லை.

    ஊரடங்கை இப்போது அரசு முடிவுக்கு கொண்டுவந்தாலும், பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை உடனே தொடங்கி விட முடியாது. குறைந்தபட்சம் 1 மாதம் காத்திருக்க வேண்டியது வரும். கொரோனா பரவுவது நின்று விட்டது என்ற நிலை வர வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×