search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு வன்முறை காட்சி
    X
    பெங்களூரு வன்முறை காட்சி

    தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வன்முறை- பெங்களூருவில் 54 பேர் கைது

    பெங்களூருவில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெங்களூரு:

    பெங்களூர் பாதராயணபுரம் பகுதியைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் 15 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் பரிசோதனை செய்து தனிமை முகாமிற்கு அழைத்துச் செல்வதற்காக அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று இரவு அப்பகுதிக்கு சென்றனர். 

    அப்போது தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தும் அப்பகுதி மக்கள் ரகளையில் ஈடுபட்டனர். பரிசோதனை முகாமிற்காக வைக்கப்பட்டிருந்த மேஜைகளை தூக்கிப்போட்டு உடைத்தனர். போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை உடைத்தனர். அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


    இதனால் அங்கு திடீர் பதற்றம் உருவானது. துணை கமிஷனர் உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். 

    வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ஜெ.ஜெ. நகர் போலீசார், இது தொடர்பாக 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    கொரோனா அறிகுறி உள்ளவர்களில் மீதமுள்ள 43 பேரும் இன்று தனிமை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என தெரிகிறது.
    Next Story
    ×