search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி மகன் நிகில்-ரேவதி திருமணம்
    X
    குமாரசாமி மகன் நிகில்-ரேவதி திருமணம்

    சர்ச்சையை ஏற்படுத்திய குமாரசாமியின் மகன் திருமணம்

    குமாரசாமி மகன் திருமணத்தில் முக கவசம் அணியவில்லை என்றும், சமூகவிலகலை கடைப்பிடிக்கவில்லை என்றும், 400-க்கும் மேற்பட்ட கார்களில் பலர் கலந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    பெங்களூரு :

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நடிகர் நிகில், பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மந்திரி கிருஷ்ணப்பாவின் சகோதரர் பேத்தி ரேவதி ஆகியோருக்கு 17-ந் தேதி (நேற்று) ராமநகரில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்திருந்தார். முக்கிய பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் அதில் பங்கேற்க இருந்தனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. திருமண நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முடிவு செய்துள்ள திருமணம் நடத்த தடை இல்லை என்றும், ஆனால் அதில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தனது மகன் திருமணம் மிக எளிமையாக குடும்பத்தினர் முன்னிலையில் ராமநகர் மாவட்டம் பிடதி அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்தார்.

    அதன்படி பிடதி அருகே உள்ள பண்ணை வீட்டில் குமாரசாமியின் மகன் நிகிலுக்கும், ரேவதிக்கும் இடையே திருமணம் நேற்று காலை ஒக்கலிக சமூக முறைப்படி நடந்தது.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மனைவி சென்னம்மா உள்பட குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இதில் குடும்பத்தினர், நெருங்கிய உறவுகள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். 45 கார்களுக்கு போலீசார் அனுமதி வழங்கினர். திருமணம் நடந்த அந்த பண்ணை வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே முதல்- மந்திரி எடியூரப்பா, நிகில்-ரேவதி ஆகியோருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடியூரப்பா டுவிட்டர் பதிவில், திருமண பந்தத்தில் இணைந்த நிகில்-ரேவதிக்கு வாழ்த்துக்கள். உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால் குமாரசாமி மகன் திருமணத்தில் முக கவசம் அணியவில்லை என்றும், சமூகவிலகலை கடைப்பிடிக்கவில்லை என்றும், 400-க்கும் மேற்பட்ட கார்களில் பலர் கலந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    Next Story
    ×