search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்துதர வேண்டும்- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர் ஜெரில் பனைட், வக்கீல் அமித் சாஹ்னி, டாக்டர் ஆருஷி ஜெயின் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டின் அனைத்து பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கொரோனா சிகிச்சை தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உலக சுகாதார மையம் பரிந்துரைத்த முக கவசங்கள் மற்றும் தற்காப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். தற்போது நாட்டில் இந்த பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

    மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தவில்லை என்றால் நாட்டின் மருத்துவத்துறை மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே இதுபோன்ற பற்றாக்குறையை உடனடியாக நீக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் அசோக் பூஷண், ரவீந்திர பட் ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

    மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, “மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகள் வழங்குவதற்கு அதற்கான தொகை அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படுகிறது” என்று வாதிட்டார்.

    இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அப்படி எந்த மருத்துவமனையாவது ஈடுபட்டால் அங்கு நாங்கள் உடனடியாக போலீசை அனுப்பி வைப்போம். மருத்துவ பணியாளர்கள் அனைத்து வகையிலும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது” என்று கூறினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தற்போது ஊரடங்கு தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்பது மட்டுமின்றி கொரோனாவுக்கு எதிரான போர் தொடர்பாகவும் மக்களின் கருத்துகளை கேட்டு அறியும் வகையில் ஒரு செயல்முறையை அமல்படுத்த முடியுமா? என்பதையும் அரசு ஆலோசிக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்கள்.

    மேலும், “கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிவரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் கொரோனா போராளிகள். அவர்களை காப்பது மத்திய அரசின் கடமையாகும். எனவே, டாக்டர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளை செய்து தரவேண்டும். தற்காப்பு சாதனங்கள் பற்றாக்குறையின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×