search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் 15 நாளில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் எண்ணிக்கை 62-ல் இருந்து 257 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 15 நாளில் 62-ல் இருந்து 257 ஆக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டு கிடந்தாலும்கூட, கொரோனா வைரஸ் தன் ஆதிக்கத்தை வேகமாக பரப்பிக்கொண்டுதான் இருக்கிறது.

    நமது நாட்டில் 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் 718 மாவட்டங்கள் உள்ளன.

    ஆனால் இப்போது கொரோனா வைரஸ் அவற்றில் 257 மாவட்டங்களுக்கு பரவிவிட்டது. அதுவும் இந்த வைரஸ் 62 மாவட்டங்களில் பாதித்திருந்த நிலையில், 15 நாளில் 257 மாவட்டங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவி உள்ளது.

    இதையொட்டி மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவிடம் சுகாதாரத்துறை அமைச்கத்தின் உயர் அதிகாரி குல்தீப் சிங் விளக்கி உள்ளார்.

    கொரோனா வைரஸ் பரவல்

    அப்போது அவர் தெரிவித்த புள்ளி விவரங்கள் வருமாறு:-

    * மார்ச் 20-ந் தேதி மராட்டிய மாநிலத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில்தான் கொரோனா வைரஸ் 10-க் கும் மேற்பட்டவர்களுக்கு பரவி இருந்தது. ஆனால் ஏப்ரல் 4-ந் தேதி நிலவரப்படி, 10 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவிய மாவட்டங்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

    * இதே காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 195-ல் இருந்து 2,769 ஆக உயர்ந்திருக்கிறது.

    * மார்ச் 20-ந் தேதி கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 62. ஆனால் 5 நாளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காகி (117) விட்டது.

    * கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துகிற வகையில், ஜனவரி 17-ந் தேதி சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்த விமானங்கள் 3 விமான நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மார்ச் 4-ந் தேதி முதல் எல்லா சர்வதேச விமானங்களில் வந்த பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நாளில்தான், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6-ல் இருந்து 4 மடங்காகி 24 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் முதன்முதலாக பாதித்தது ஜனவரி 30-ந் தேதி ஆகும்.

    * கொரோனா வைரஸ் தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம், மார்ச் 11-ல் அறிவித்தது. சமூக இடைவெளியை பராமரிக்கும் ஆலோசனை மார்ச் 17-ல் வழங்கப்பட்டது. அந்த நாளில் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்தது. மார்ச் 22-ந் தேதி முதன் பன்னாட்டு விமானங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அதே நாளில் ஒரு நாள் மக்கள் ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டது.

    இந்த தகவல்கள், மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அளிக்கப்பட்டன.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் சமூக பரவலுக்கு போவதை தடுக்கிற விதத்தில், எல்லா மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு வியூகம் வகுக்க வேண்டும், அதை தீவிரமாக அமல்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×