search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    84 லட்சம் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

    நாடு முழுவதும் 17 ஆயிரம் சிறப்பு முகாம்களில் தினந்தோறும் 84 லட்சம் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 24-ந் தேதி இரவு அறிவிக்கப்பட்ட இந்த திடீர் உத்தரவால் அனைத்து மாநிலங்களிலும் வேலை பார்த்து வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்காத சூழ்நிலை உருவானது.

    இதேபோல ஆதரவற்ற ஏழை மக்களும் இந்த ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, ஊரடங்கால் உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவிகளை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சமூகஆர்வலர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நாடு முழுவதும் 17 ஆயிரம் சிறப்பு முகாம்களில் தினந்தோறும் 84 லட்சம் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தங்குவதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்த 15 லட்சம் தொழிலாளர்கள் 26 ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×