search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் ராணுவத்தினர் - மத்திய அரசு ஏற்பாடு

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் ராணுவத்தினரை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து உள்ளது.
    புதுடெல்லி:

    இயற்கை பேரழிவு போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் முன்னாள் ராணுவ வீரர்களின் சேவையை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

    கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். சுகாதாரதுறை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதனால் போலீசாருக்கும், சுகாதார துறை ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து, கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் முன்னாள் ராணுவ வீரர்களையும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளது.

    இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா ஒழிப்பு தொடர்பான பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது, மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பது, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்காணிப்பது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். தேவைப்படும் இடங்களில் பணிகளை மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பஞ்சாப் மாநிலத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் உதவும் பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் 4,200 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஜார்கண்டில், பாதுகாப்பு பணியில் போலீசாருக்கு உதவியாக முன்னாள் ராணுவ வீரர்களை அந்த மாநில அரசு பணியில் ஈடுபடுத்தி உள்ளது. ஆந்திராவில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் முன்னாள் ராணுவ வீரர்களின் உதவியை நாடி இருக்கிறார்கள்.

    உத்தரபிரதேசத்தில் முன்னாள் ராணுவ வீரர்களும், ராணுவத்தில் மருத்துவர்களாக பணியாற்றியவர்களும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதேபோல் மற்ற மாநில அரசுகளும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×