search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    திட்டமிடப்படாத ஊரடங்கால் பாதிப்பு என மத்திய அரசு மீது சோனியா காந்தி சாடல்

    திட்டமிடப்படாத ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், குறைந்தபட்ச பொதுநிவாரண திட்டம் தயாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம், தலைநகர் டெல்லியில் காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திட்டமிடாத வகையில் ஊரடங்கு அறிவிக் கப்பட்டதாக மத்திய அரசை சோனியா சாடினார். அவர் பேசியபோது கூறியதாவது:-

    முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டில் சுகாதாரம் மற்றும் மனிதநேய நெருக்கடி சூழ்ந்துள்ள நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம். நமக்கு முன்னால் இருக்கும் சவால் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் அதை கடப்பதற்கான உறுதி நம்மிடம் அதிகமாக இருக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மனித குலத்தை ஒன்றிணைக்கும் சகோதரத்துவ பிணைப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது.

    நமது நாட்டில் இந்த கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது ஏழைகளும், பின்தங்கியவர்களும்தான். அவர்களின் நலன்களுக்காக நாம் ஒன்றிணைந்து, முடிந்த அவ்வளவையும் செய்ய வேண்டும்.

    21 நாள் ஊரடங்கு என்பது தேவையானதுதான். ஆனால் திட்டமிடப்படாமல் அறிவித்தது, இந்தியாவில் உள்ள லட்சோப லட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வில் குழப்பத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    லட்சக்கணக்கான மக்கள் உணவும், தங்குமிடமும் இன்றி பல நூறு கி.மீ. தொலைவில் உள்ள சொந்த கிராமங்களுக்கு நடந்து சென்றதைப் பார்த்தபோது மனம் உடைந்து போய் விட்டது. அவர்களது துன்பம் குறைவதற்கு நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்ய வேண்டியது நமது கடமை. அவர்கள் மீது இரக்கமும், கருணையும் கொண்டு உதவிசெய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா வைரசை பொறுத்தமட்டில் நிலையான, நம்பகமான சோதனை முறை இல்லை. நமது டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் நமது ஆதரவு தேவைப்படுகிறது. பாதுகாப்பு கவச உடைகள், என்-95 முக கவசங்கள் உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    அதற்கு சமமாக கொரோனா பாதிப்புக்கு ஆளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரி, படுக்கை, செயற்கை சுவாச கருவிகள் போன்ற அனைத்து வசதிகளும் தேவை. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், கொரோனா வைரஸ் பரவாமலும், இறப்புகள் நிகழாமலும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு ஆஸ்பத்திரிகள், அவற்றில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தும் வசதிகள், பரிசோதனை வசதிகள், பொதுமக்களுக்கு மருத்துவ பொருட்கள் வினியோகித்தல் உள்ளிட்டவை போன்ற விவரங்களை அரசு வெளியிட்டு, கிடைக்கச்செய்ய வேண்டும்.

    பருவ நிலையால் கஷ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் இப்போது அறுவடை காலத்திலும், நாடு முழுவதும் ஊரடங்கு போட்டுள்ள நிலையில் போராட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

    அவர்களுக்கு லாபம் தரக் கூடிய விலை வேண்டும். அப்போதுதான் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் தப்பிக்க முடியும்.

    நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன. சமீபத்திய நிகழ்வுகளால் அவை மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

    கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளை சமாளிக்க அரசிடம் விரிவான ஒரு திட்டம் தேவை.

    முறைசாரா தொழிலாளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அவர்களின் வாழ்வாதாரத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது. அவர்கள் ஏற்கனவே பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். நாம் ஒரு தேசமாக ஒன்றிணைந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    நடுத்தர வர்க்கத்தினரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஊதிய குறைப்பு, வேலை இழப்புகள், விலைவாசி உயர்வு அவர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துகின்றன.

    மாதாந்திர தவணை ஒத்திவைக்கப்பட்டாலும்கூட, வட்டி மானியம் வழங்கப்படவில்லை.

    எனவே பொதுவான குறைந்தபட்ச நிவாரண திட்டத்தை தயாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது இன்றியமையாதது. அனைத்து தரப்பு மக்களின் கவலைகளை குறைக்க உதவக்கூடியதும் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×