search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம் வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை
    X
    மதுபானம் வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை

    மருத்துவர் பரிந்துரையின் பேரில் மதுபானம்: கேரள அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை

    குடிக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் மதுபானம் வழங்கப்படும் என கேரள அரசு முடிவு செய்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அதற்கு தடைவிதித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 21 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் குடிப்பிரியர்கள் தவித்து வருகிறார்கள். குடிக்கு அடிமையானவர்கள் திடீர் என்று அதை நிறுத்துவதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

    அவர்களுக்கு கைகால் நடுக்கம், மயக்கம், வலிப்பு, தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சிலர் தற்கொலைகூட செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக கேரளாவில் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

    குடிப்பழக்கத்தை விடமுடியாத குடிமக்களுக்கு கேரள அரசு சிறப்பு ‘பாஸ்’கள் வழங்க முடிவு செய்தது. இதற்கான உத்தரவு கடந்த திங்கட்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி குடிப்பழக்கத்தை விட முடியாமல் பக்க விளைவுகளை சந்திப்பவர்களுக்கு மருத்துவர்களின் சிபாரிசுகளின்படி கட்டுப்பாடான அளவில் மதுபானம் வழங்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சிறப்பு மதுபான ‘பாஸ்’ பெற விரும்பும் ‘குடி’மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற ஏதாவது ஒன்றை அணுகி “இவர் குடிப்பழக்கத்தை விட்டதால், பக்க விளைவுகளை சந்தித்து வருபவர்” என்பதற்கான டாக்டர் பரிந்துரையை பெற வேண்டும்.

    அதோடு அரசு அளித்து இருக்கும் அடையாள அட்டையையும் சேர்த்து, வணிக வரித்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பு மதுபான ‘பாஸ்’களை வழங்குவார்கள். அதை கூட்டுறவு சங்க அங்காடிகளில் காட்டி குடிப்பிரியர்கள் மது வாங்கிக் கொள்ளலாம். என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    கேரள அரசின் இந்த முடிவுக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதற்கிடையில் கேரள அரசின் இந்த முடிவை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர் பரிந்துரையின் பேரில் மதுபானம் வழங்ப்படும் என்ற கேரள அரசின் முடிவுக்கு மூன்று வாரங்கள் தடைவிதித்துள்ளது.
    Next Story
    ×